இந்தியா ஜெயிக்கணும்னா அவரை ஆரம்பத்திலேயே ‘அவுட்’ ஆக்கிடுங்க.. இல்லைனா ரொம்ப ‘கஷ்டம்’ தான்.. எச்சரிக்கை செய்த முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்த இந்தியா செய்ய வேண்டியது குறித்து மான்டி பனேசர் அறிவுரை வழங்கியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வரும் 24-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் மோதவுள்ளன. துபாய் மைதானத்தில் நடைபெற உள்ள இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தையும், ஆஸ்திரேலியாவையும் இந்தியா வீழ்த்தியுள்ளது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடியது. இதில் வெஸ்ட் இண்டீஸுகு எதிராக வெற்றியும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியும் பாகிஸ்தான் அணி அடைந்துள்ளது.

இந்த நிலையில், இப்போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் (Monty Panesar) இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியுள்ளார். அதில், ‘பாகிஸ்தானை வீழ்த்த வேண்டுமென்றால், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமை (Babar Azam) ஆரம்பத்திலேயே இந்தியா வீழ்த்த வேண்டும். பாபர் அசாம் மற்றும் பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி (Shaheen Afridi) ஆகிய இருவரும் பாகிஸ்தான் அணியின் கீ (Key) ப்ளேயர்களாக இருப்பார்கள். பாபர் அசாம் பேட்டிங்கில் நிலைத்து நின்றுவிட்டால், ரன்களை குவித்து விடுவார்.

அதேபோல் ஷாகின் அப்ரிடி இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஆரம்ப ஓவர்களிலேயே சிரமத்தை கொடுப்பார் என நினைக்கிறேன். தற்போது இருக்கும் இந்திய அணி பாகிஸ்தானை விட பலம் வாய்ந்ததாக இருந்தாலும், சமீப காலமாக பாகிஸ்தானும் சிறப்பாகவே விளையாடி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான் அணி நன்றாக விளையாடி வருவதால், அந்த அணிக்கு மைதானம் சாதகமாக அமைந்துவிட்டால் இந்தியாவுக்கு சிரமம்தான்’ என மான்டி பனேசர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்