‘சதமடித்து அசத்திய அஸ்வின்’!.. இதை அவரை விடவும் அதிகமாக ‘செலிப்ரேட்’ பண்ணது இவர்தான்.. அதிர்ந்த சேப்பாக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சதமடித்து அசத்தினார்.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக  ரோஹித் சர்மா 161 ரன்களும்,  ரஹானே 67 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மோயின் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி, இந்திய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 3-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற, கேப்டன் விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் அடுத்தடுத்து அவுட்டாகி வீரர்கள் வெளியேறியதால், இந்திய அணி 86 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து வந்த அக்சர் பட்டேலும் 7 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

இந்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அஸ்வின், விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் விராட் கோலி, அஸ்வின் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர். கேப்டன் விராட் கோலி 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய குல்தீப் யாதவ் 3 ரன்னிலும், இஷாந்த் ஷர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்ததாக அஸ்வினுடன், முகமது சிராஜ் ஜோடி சேர்ந்தார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஸ்வின் 134 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த மகிழ்ச்சியில் அஸ்வின் ஓடி வந்தார். அப்போது மறுமுனையில் இருந்த முகமது சிராஜ், தானே சதம் அடித்ததுபோல் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து 106 ரன்களில் அஸ்வின் ஆட்டமிழந்தார். முகமது சிராஜ் 16 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்