'அது எப்படி என்னை நீங்க நீக்கலாம்?'... 'வேண்டானா சொல்லுங்க, கிரிக்கெட்டில் இருந்தே போய்டுறேன்'!..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நான் விளையாடுவது பிடிக்கவில்லை என்றால் கூறுங்கள், நான் கிரிக்கெட்டில் இருந்து விலகி விடுகிறேன் என, ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி வீரர் முகமது ஷசாத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் முகமது ஷசாத். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்த அவர், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் ஆடினார். நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 8-ம் தேதி நடந்த போட்டிக்கு முன், அணியில் இருந்து ஷசாத் நீக்கப்பட்டார். இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உலகக் கோப்பை தொடரில் நீக்கப்பட்டதாக ஆப்கான் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது ஷசாத் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘நான் உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன். இருந்தும் உடல் தகுதி இல்லை என்று நீக்கியுள்ளனர். இது எனக்கு புரியவில்லை. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சிலர் எனக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளனர். என் இதயம் உடைந்துவிட்டது. இதுபற்றி மானேஜரிடம் கேட்டேன்.  அவரிடம் கேட்டால், என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார்.

என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அவர்களுக்கு என்னால் ஏதும் பிரச்னை என்றால், அதை எனக்குத் தெரியப்படுத்த வேண்டும். நான் விளையாட வேண்டாம் என்று விரும்பினால், கிரிக்கெட்டில் இருந்தே விலகி விடுகிறேன். உலகக் கோப்பையில் விளையாடுவது எனது கனவு. 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையின் போதும் உடல் தகுதி காரணமாக என்னை நீக்கினார்கள். இப்போதும் நீக்கியுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்