VIDEO: ‘கடைசி ஓவர் 11 ரன் தேவை’! ஸ்ட்ரைக்குல நிக்குறது ரசல்.. பவுலிங் மிட்செல் ஸ்டார்க்.. இந்த வருசத்தோட ‘த்ரில்’ மேட்ச் இதுதான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வை விளையாடியது. ஏற்கனவே தொடரை தவறவிட்டதால், எஞ்சிய போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டியது. இதனால் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 75 ரன்களும், கேப்டன் ஆரோன் ஃபின்ச் 53 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களான லென்ட்ல் சிம்மன்ஸ் 72 ரன்களும், எவின் லூயிஸ் 31 ரன்களும் எடுத்தனர். ஆனால் அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகினர். குறிப்பாக, அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இந்த சமயத்தில் ஆண்டே ரசல் மற்றும் ஃபேபியன் ஆலன் ஜோடி சேர்ந்தனர். இந்த கூட்டணி காட்டிய அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவில் இருந்து மெல்ல மீண்டது. அப்போது போட்டியின் 19-வது ஓவரை ஆஸ்திரேலிய வீரர் ரிலே மெரிடித் வீசினார். அந்த ஓவரில் ரசல் ஒரு சிக்சர் அடிக்க, ஃபேபியன் ஆலன் ஹாட்ரிக் சிக்சர் விளாசி, கடைசி பந்தில் அவுட்டானர். இதனால் அந்த ஓவரில் 24 ரன்கள் கிடைத்தது.

இதனை அடுத்து கடைசி ஓவரில் 11 ரன்கள் அடித்தால் வெற்றி நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருந்தது. அப்போது ஸ்ட்ரைக்கில் ரசல் நின்றார். கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் வீச வந்தார். இதனால் போட்டியில் பரபரப்பு கூடியது. ஆனாலும் அதிரடி வீரர் ரசல் இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணி எப்படியும் வென்றுவிடும் என பலரும் எண்ணினர். இதனை தான் வீசிய முதல் பந்திலேயே ஸ்டார்க் பொய்யாக்கினார்.

தொடர்ந்து 4 பந்துகளில் ஒரு ரன் கூட ரசலால் எடுக்க முடியவில்லை. இதனால் கடைசி இரண்டு பந்துகளில் சிக்சர் விளாசி விடலாம் என ரசல் எண்ணி இருந்தார். ஆனால் 5-வது பந்தும் டாட் பாலாக அமைய, கடைசி பந்தில் மட்டும் அவர் சிக்சர் விளாசினார். இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. உச்சக்கட்ட பரபரப்பில் இருந்த போட்டியில், சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்த மிட்சல் ஸ்டார்க்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்