"ஒருபக்கம் 'வருத்தமா' தான் இருக்கு.. ஆனாலும் உங்க குணத்தால ரொம்ப உயர்ந்து நிக்குறீங்க!." 'டிவில்லியர்ஸ்' முடிவால் நெகிழ்ந்து போன 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி 20 உலக கோப்பை போட்டி தள்ளிப் போனது.

இதனைத் தொடர்ந்து, டி 20 உலக கோப்பை இந்தாண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக அனைத்து அணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதிலும் குறிப்பாக, டி 20 தொடர்களில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளதாக தெரிகிறது.

இதில், கிரிக்கெட் உலகின் நம்பர் 1 அதிரடி வீரரான ஏபி டிவில்லியர்ஸை (AB de Villiers) மீண்டும் அணியில் இணைக்க, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்த டிவில்லியர்ஸ், அதன் பிறகு, தொடர்ந்து உள்ளூர் லீக் போட்டிகள் மற்றும் டி 20 தொடர்களில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்.

ஐபிஎல் தொடரில், பெங்களூர் அணிக்காக ஆடி வரும் டிவில்லியர்ஸ், இந்த ஆண்டு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் சீசனிலும், நடைபெற்ற போட்டிகளில், எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். இதன் காரணமாக, டி 20 உலக கோப்பையும் நடைபெறவுள்ளதால், அவரை மீண்டும் சர்வதேச அணியில் இணைக்க, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

இதுபற்றி பேசிய டிவில்லியர்ஸ், தனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பங்குபெறுவேன் என விருப்பம் தெரிவித்திருந்தார். இதனால், அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். டி 20 உலக கோப்பை போட்டிகளுக்காக அவர்கள் ஆவலுடன் காத்திருக்கவும் ஆரம்பித்தனர்.

இதனிடையே, சில தினங்களுக்கு முன், டிவில்லியர்ஸ் சர்வதேச அணியில் மீண்டும் இணையமாட்டார் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்தது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் (Mark Boucher), 'டிவில்லியர்ஸ் மீண்டும் அணிக்கு திரும்ப விருப்பமில்லை என தெரிவித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் மிகவும் ஏற்புடையதாக இருந்தது.


"தான் மீண்டும் அணிக்குத் திரும்பினால், ஏற்கனவே அணியில் நீடிப்பவர்களை நீக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனை நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன். தற்போதைய அணி மிகவும் பலமாக தான் இருக்கிறது" என டிவில்லயர்ஸ் கூறினார்.

அவர் சொன்ன காரணம், சரியாக இருந்ததால், நாங்கள் அவரை வற்புறுத்த விரும்பவில்லை' என மார்க் பவுச்சர் டிவில்லியர்ஸ் விலகியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்