VIDEO: ‘மன்னிச்சிக்கோங்க.. இனிமேல் அப்படி நடக்காது’.. வங்கதேச கேப்டனிடம் ‘மன்னிப்பு’ கேட்ட ஸ்காட்லாந்து அணி.. என்ன நடந்தது..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹ்மதுல்லாவிடம் ஸ்காட்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் (Chris Greaves) 45 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணியைப் பொறுத்தவரை மகேதி ஹசன் 3 விக்கெட்டுகளும், ஷாகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், டாஸ்கின் அகமது மற்றும் சைஃபுதீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் போட்டி முடிந்ததும் வங்கதேச அணியின் கேப்டன் மஹ்மதுல்லா (Mahmudullah) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தோல்விக்கான காரணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்துக் கொண்டிருந்தபோது, ஸ்காட்லாந்து ரசிகர்கள் சத்தமாக பாட்டு பாடி தங்களது அணியின் வெற்றியை கொண்டாடினர்.

இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் இடையூறு ஏற்படவே, ஸ்காட்லாந்து ரசிகர்கள் கொண்டாடும் வரை மஹ்மதுல்லா சிறிது நேரம் அமைதியாக இருந்தார். இதனை அடுத்து தோல்விக்கான காரணம் குறித்து பதிலளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் இதற்கு மஹ்மதுல்லாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் இதுபோல் அடுத்த முறை நடக்காது என்றும் கூறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்