‘மக்களின் உணர்வோடு விளையாடாதீங்க’!!!... ‘கிரிக்கெட், சினிமா பிரபலங்களுக்கு’... ‘மதுரை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த இந்திய கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, நடிகை தமன்னா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகமது ரஸ்வி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில்,  ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் விளம்பரம் செய்வதன் மூலம், அதிக அளவு இளைஞர்கள் தங்கள் பணங்களை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இதனால் பணத்தை இழக்கும் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது எனவும், இந்த விளையாட்டை ஊக்கப்படுத்தும் விளம்பர தூதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

விசாரணையின் போது நீதிபதிகள், “பிரபலமானவர்கள் விளம்பரம் செய்யும் போது பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் தான் கவனம் செலுத்துகின்றனர். பொதுமக்கள் பலர் தங்களை பின்பற்றுவார்கள் என்பது தெரிந்திருந்தும், பிரபலமானவர்கள் அவ்வாறு செயல்படுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும் ‘கிரிக்கெட்டில் சூதாட்டம் இல்லையா? கிரிக்கெட் அணிகளில் மாநில பெயரை பயன்படுத்துவது ஏன்? அவ்வாறு பயன்படுத்தாவிட்டால் யாரும் கிரிக்கெட்டை பார்க்கமாட்டார்கள். வியாபார நோக்கத்தில் இப்படி செய்யலாமா? மக்களை தூண்டலாமா? என அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மரபுப்படி இது சரியா என்றும், பிரபலமானவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கள் தொடர்பாக மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கி மக்கள் விளையாட வைக்கப்படுகின்றனர்.

இதன் மூலம் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள் என்றனர். விளையாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து, வீரர்கள் மூலம் லாபத்தை சம்பாதிப்பதாகவும்’ நீதிபதிகள் கூறினர். பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய கேப்டன் விராட் கோலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா மற்றும் ஆன்லைன் ரம்மி கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நவம்பவர் 19-க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்