இந்த 'ஐபிஎல்' சீசனில்.. 'தோனி' அடிச்சு நொறுக்க காத்திருக்கும் முக்கிய 'சாதனைகள்'.. "இது எல்லாம் நடந்தா 'சிஎஸ்கே' ஃபேன்ஸ்'க்கு கொண்டாட்டம் தான் போங்க!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஐபிஎல் தொடரில், பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பிடித்து முதல் முறையாக வெளியேறியிருந்தது.

அது மட்டுமில்லாமல், தோனியின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் உள்ளிட்ட பல விஷயங்கள், கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தது. இதனால், இந்த முறை தங்களது பழைய ஆட்டத்தை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளனர். அதே போல, தோனி கூட பயிற்சியில் சிறப்பாக ஷாட்களை அடித்து வருவது, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சீசனில், சில முக்கிய சாதனைகளை தோனி படைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. இதுவரை மொத்தம் 188 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள தோனி, இந்த சீசனில் ஆடும் போது, ஐபிஎல் தொடரில் கேப்டனாக 200 போட்டிகள் ஆடிய முதல் வீரர் என்ற சாதனையை பெறலாம்.

மேலும், ஐபிஎல் தொடரில் இதுவரை தோனி 4,632 ரன்கள் அடித்துள்ள நிலையில், இன்னும் 368 ரன்களை இந்த சீசனில் அடிக்கும் பட்சத்தில், 5000 ரன்களை ஐபிஎல் தொடரில் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெறுவார்.

இதுவரை விக்கெட் கீப்பராக 148 பேரை அவுட்டாகியுள்ள தோனி, இன்னும் 2 பேரை இந்த சீசனில் அவுட் செய்தால் 150 பேரை அவுட் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைக்கலாம். தோனிக்கு அடுத்தபடியாக, மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (140 விக்கெட்டுகள்) உள்ளார்.

அதே போல, கீப்பராக அதிக கேட்ச் எடுத்ததில், தினேஷ் கார்த்திக்கை (110) விட, ஒன்றே ஒன்று தான் தோனி (109) குறைவாக உள்ளார். இருவரும் இந்த சீசனில் ஆடவுள்ளதால், தொடரின் இறுதியில், யார் முதலிடத்தில் இருப்பார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

அதே போல, ஐந்தாவது இடத்தில் களமிறங்கி அதிகம் ஆடியுள்ள தோனி, அந்த போஷிசனில், இதுவரை 1928 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 72 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், ஐந்தாவது இடத்தில் களமிறங்கி 2000 ரன்னை தொட்ட முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில், மொத்தம் 17 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ள தோனி, இந்திய வீரர்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ரோஹித் ஷர்மா (18 முறை) உள்ள நிலையில், ஒன்றே ஒன்று மட்டும் வித்தியாசமாக இருப்பதால், இந்த தொடரின் இறுதிக்குள் ரோஹித்தை தோனி முந்தினால், இந்திய வீரர்கள் வரிசையில் அவர் முதலிடத்தை பிடிக்கலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்