'இந்தியாவுக்காக ஓடிய கால்கள்'... '91 வயதில் கொரோனாவால் மரணமடைந்த மில்கா சிங்'... தலைவர்கள் இரங்கல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா தொற்றால் மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "விளையாட்டு ஐகான் மில்கா சிங் மறைந்தார் என்ற செய்தி  வருத்தம் அடையச் செய்தது. அவரது போராட்டங்களின் கதை மற்றும் விளையாட்டில் அவரது பாத்திரத்தின் வலிமை தொடர்ந்து தலைமுறை இந்தியர்களுக்கு ஊக்கமளிக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எண்ணற்ற அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

இந்திய தடகளத்தில் ஜாம்பவானாகத் திகழும் பஞ்சாபைச் சேர்ந்த முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் (Milkha Singh), மிக வேகமாக ஓடும் திறமையினால், பறக்கும் சீக்கியர் என அழைக்கப்படுகிறார். ஆசிய தடகள போட்டிகளில்மில்கா சிங் 5 முறை  தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

1960-ல் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், மில்கா சிங்  400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 45.73 வினாடிகளில் இலக்கை கடந்து 4-வது வந்து சாதனை படைத்தார். தேசிய அளவில் சுமார் 40 ஆண்டுகள் இந்த சாதனை முறியடிக்கப்படாமலேயே இருந்தது. மில்கா சிங்குக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்