“என் வாழ்க்கை முழுவதும் இந்த அவமானத்தை சந்திச்சேன்”.. நீண்ட நாள் மன வேதனையை வெளிப்படுத்திய ‘தமிழக’ வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமன் சிவராமகிருஷ்ணன் நிற பாகுபாட்டால் ஏற்பட்ட அவமானங்கள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது நிற பாகுபாடு, மத வேறுபாடுகள் குறித்த சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளருமான லட்சுமன் சிவராமகிருஷ்ணன், நிற பாகுபாட்டால் ஏற்பட்ட அவமானம் பகிர்ந்துள்ளார்.
தற்போது லட்சுமன் சிவராமகிருஷ்ணன் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். போட்டியின்போது வர்ணனையாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு கிண்டல் செய்வதுண்டு. அதேபோல் லட்சுமன் சிவராமகிருஷ்ணன் கூறிய கருத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த லட்சுமன் சிவராமகிருஷ்ணன், ‘என்னுடைய வாழ்க்கையில் இப்போது வரை நிற பாகுபாட்டால் விமர்சிக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் வருகிறேன். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் என் சொந்த நாட்டு மக்களே என்னை நிறத்தை வைத்து விமர்சனம் செய்துள்ளனர். இதையெல்லாம் கடந்து தான் வந்துள்ளேன். அதனால் எனது வர்ணனையை நீங்கள் கிண்டல் செய்வது என்னை பெரிதாக பாதிக்காது’ என வேதனை தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழக வீரரான அபிநவ் முகுந்த்தும் நிற பாகுபாடு குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘10 வயதிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு பயணித்து உள்ளேன். ஆனால் நான் எப்போதும் நிற பாகுபாடால் விமர்சிக்கப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது. நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். அங்கு வெயில் எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.
அந்த வெயிலில் தினமும் நான் பயிற்சி மேற்கொள்வதால், எனது நிறம் சற்று குறைந்திருக்கும். இதன்மூலம் நான் கிரிக்கெட்டை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பது தெரியவரும். ஆனால் அனைவரும் அதை கிண்டலடிப்பார்கள். இந்த சர்ச்சைகள் இனியும் உருவாகாமல் இருக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அபினவ் முகுந்த் வேண்டுகோள் வைத்துள்ளார்.
மற்ற செய்திகள்