‘மகனே, உன் நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு’!.. முன்பே கணித்த பாண்ட்யாவின் தந்தை.. வெளியான உருக்கமான தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர் க்ருணால் பாண்ட்யா, மறைந்த தனது தந்தை குறித்து ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்றுமுன்தினம் புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் 98 ரன்கள் அடித்து அசத்திய ஷிகர் தவானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இப்போட்டியில் அறிமுகமான ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் பிரஷித் கிருஷ்ணா, தான் வீசிய 8.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அதேபோல் க்ருணால் பாண்ட்யாவும் 31 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அசத்தினார். அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியிலேயே குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை க்ருணால் பாண்ட்யா படைத்தார்.

முன்னதாக போட்டியில் அறிமுகம் ஆகும்போது சகோதரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் தொப்பியை வாங்கியதும் க்ருணால் பாண்ட்யா உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். இதனை அடுத்து அரைசதம் அடித்ததும் அவரிடம் பேட்டி காணப்பட்டது. அப்போது பேச முடியாமல் கண்ணீர் சிந்திய அவர், இந்த அரைசதத்தை மறைந்த தனது தந்தைக்கு சமர்ப்பிப்பதாக கூறினார். இதனை அடுத்து களத்தில் இருந்த ஹர்திக் பாண்ட்யா அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து எதிரான முதல் ஒருநாள் போட்டியை வெற்றி பெற்றபின், இதை தங்களது தந்தைக்கு சமர்பிப்பதாக க்ருணால் மற்றும் ஹர்திக் ஆகிய இருவரும் ட்விட்டரில் பதிவிட்டனர்.

முன்னதாக சையது முஷ்தாக் அலி டிராபி கிரிக்கெட் தொடரின் போட்டி ஒன்றில் க்ருணால் பாண்ட்யா 76 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். அப்போது க்ருணல் பாண்ட்யாவிடம், ‘மகனே, உன்னுடைய நேரம் ஆரம்பித்துவிட்டது’ என தந்தை
ஹிமான்ஷு பாண்ட்யா கூறியுள்ளார். அவர் கூறியது போலவே ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் க்ருணால் பாண்ட்யாவுக்கு இடம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தந்தை குறித்து க்ருணால் பாண்ட்யா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், ‘பொதுவாக போட்டிக்கு முந்தைய நாளே அவர் அணியும் ஆடையை எடுத்து வைத்துவிடுவார். ஜனவரி 16, என்னுடைய போட்டியை பார்க்கத்தான் இந்த ஆடையை எடுத்து வைத்திருந்தார். ஆனால் அதற்குள் அவர் எங்ககளை பிரிந்துவிட்டார். அவர் எப்போதும் என்னுடன் இருப்பதை உணர்வதற்காக, அந்த ஆடையை என் டிஸ்ஸெங் ரூமில் வைத்தேன். இதுதான் என் அறிமுக போட்டியை வலிமையாக்கியது’ என தனது தந்தை எடுத்து வைத்திருந்த ஆடையின் போட்டோவை பதிவிட்டுள்ளார். பாண்ட்யா சகோதரர்களின் தந்தை ஹிமான்ஷு பாண்ட்யா கடந்த ஜனவரி மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்