‘என்னால 24 இல்ல 200 பால் கூட வீச முடியும்’.. தயவுசெஞ்சு அப்படி கேக்குறத நிறுத்துங்க.. மலிங்கா கொடுத்த பதிலடி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக எழும் விமர்சனங்களுக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா பதிலளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சளரான லசித் மலிங்கா, கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் மற்றும் 84 டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள மலிங்கா, கடந்த ஆண்டு சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் மலிங்கா, இன்றும் எதிரணியை அச்சுறுத்தும் பவுலராகவே திகழ்ந்து வருகிறார். தற்போது 37 வயதாகும் அவர், கடந்த மார்ச் மாதம் முதல் எந்தவித சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. அதனால் அவரது ஓய்வு குறித்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையல் இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த மலிங்கா, ‘என்னால் இப்போதும் டி20 கிரிக்கெட்டில் 24 பந்துகளை ( 4 ஓவர்கள்) எளிதாக வீச முடியும். சொல்லப்போனால் நான் 200 மேற்பட்ட பந்துகளை கூட வீசுவேன். ஆனாலும் முன்புபோல என்னால் உடற்தகுதியை நீரூபிக்க முடியவில்லை. ஏனென்றால் நான் வீட்டிலேயே இருப்பதால், அதை என்னால் செய்ய முடியவில்லை. என்னை 2 கிலோ மீட்டர் ஓட சொன்னால் முடியாது. ஆனால் 2 மணிநேரம் தொடர்ந்து என்னால் பந்துவீச முடியும்.

இப்போதும் என்னால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும். நான் இருமுறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் இலங்கை கிரிக்கெட் வாரியமும் என்மீது நம்பிக்கை வைத்து என்னை விளையாட வைக்க வேண்டும்’ என மலிங்கா கூறியுள்ளார். இன்னும் சில மாதங்களில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், மலிங்காவின் இந்த பதில் அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக இலங்கை அணி மோசமாக விளையாடி வருவதால், தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால் தற்போது அணியில் உள்ள வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இதன்காரணமாக மலிங்கா போன்ற முன்னணி வீரர்களை அணியில் விளையாட வைக்க வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்