டி20 உலகக்கோப்பை வேற வரப்போகுது.. இந்த நேரத்துல போய் ஏன் மலிங்கா இப்படியொரு முடிவு எடுத்தார்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா ட்விட்டரில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2019-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதனை அடுத்து டி20 போட்டிகளில் மட்டுமே மலிங்கா விளையாடி வந்தார். ஆனால் இளம் வீரர்களின் வருகையால் தொடர்ந்து அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. கடைசியாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார். அதன் பிறகு எந்த தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

மீண்டும் இவர் இலங்கை அணிக்கு திரும்புவார் எனக் கூறப்பட்டது. தற்போது நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் மலிங்காவை விளையாட வைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் விக்ரமசிங்கே கூறியிருந்தார். இந்த நிலையில் அனைத்து விதமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா திடீரென அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘எனது டி20 ஷூவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் எனது பயணத்தில் உடனிருந்த அனைவருக்கு நன்றி. வரும் காலங்களில் இளம் வீரர்களுக்கு எனது அனுபவத்தை பகிர்ந்துக் கொள்வேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 30 டெஸ்ட் மற்றும் 226 ஒருநாள் போட்டிகளில் மலிங்கா விளையாடியுள்ளார். அதேபோல் 85 டி20 போட்டிகளில் விளையாடி 107 விக்கெட்களை எடுத்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிகெட்டில் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். குறிப்பாக 2007-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மேலும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி, பல போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலிங்காவின் ஓய்வுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோஹித் ஷர்மா, பும்ரா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், திடீரென மலிங்கா ஓய்வை அறிவித்தது, அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்