"முக்கியமான நேரத்துல 'வாய்ப்பு' கிடைக்கல.. ரொம்ப 'கஷ்டமா' இருக்கு.." மனவேதனையில் 'இந்திய' வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன்  மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்காக, இரு அணிகளும் தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி, அடுத்த சில தினங்களில் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளது. மேலும், இந்த போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி ஆடவுள்ளது.

இந்த இரு தொடர்களுக்காக, 20 வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்திருந்த நிலையில், 4 வீரர்களையும் கூடுதல் வீரர்களாக அறிவித்திருந்தது. ஆனால், இந்த தொடர்களுக்கான இந்திய அணியில், சில வீரர்கள் இடம்பெறாமல் போனது பற்றி, பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். ஹர்திக் பாண்டியா, பிரித்வி ஷா, குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் யாரும் தேர்வாகவில்லை.

இதில், சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவிற்கு, கடந்த சில ஆண்டுகளாக, இந்திய அணியில் அதிகம் வாய்ப்பு கிடைக்கவேயில்லை. தனது ஆரம்ப காலத்தில், எதிரணி பேட்ஸ்மேன்களை, தனது சுழற்பந்து வீச்சுத் திறமையால், திணறடித்த குல்தீப் யாதவின் பந்து வீச்சுத் நுணுக்கங்களை, காலப்போக்கில் பேட்ஸ்மேன்கள் சுதாரித்துக் கொண்டு ஆடத் தொடங்கினர். இதனால், விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் திணறிய குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), தனது பந்து வீச்சையும் மேம்படுத்தவில்லை.

ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக, குல்தீப் யாதவ் ஆடி வரும் நிலையில், கடந்த இரண்டு சீசன்களில், அங்கும் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களின் பல போட்டிகளில், குல்தீப் யாதவ் ஆடியிருந்தார். ஆனால், இறுதி போட்டியில் அவருக்கு வாய்ப்பில்லை.

இந்நிலையில், தனக்கு வாய்ப்பு கிடைக்காதது பற்றி பேசிய குல்தீப் யாதவ், 'இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது, வருத்தமளிக்கிறது. அங்கு சென்று, இந்திய அணியின் வெற்றிக்காக உதவ வேண்டும் என ஆசைப்பட்டேன். ஒரு வீரராக, நமக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனால், நிச்சயம் ஏமாற்றமாக தான் இருக்கும்.

எனினும், நான் அடுத்த வாய்ப்புக்காக தயாராகி வருகிறேன். நான் இங்கிலாந்து தொடருக்கு செல்லாத நிலையில், இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அதில், நிச்சயம் எனது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வேன். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று கொண்டே தான் இருக்கிறது. சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனால், வேதனை அடைவார்கள். அனைவரும் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். ஆனால், சில நேரங்களில், அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுகிறது' என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்