'பாஸ், நீங்க என்ன கர்ணன் பரம்பரையா?'... 'செம கடுப்பான ரசிகர்கள்'... மோசமான சாதனையை சொந்தமாக்கிய இந்திய வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்து இருப்பதாக ரசிகர்கள் பலரும் புலம்பி வருகிறார்கள்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த  போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் குவித்து அசத்தியது. இதனால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் பலரும் மிகவும் ஆர்வமுடன் இருந்தனர். ஆனால் ரசிகர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி, 39 பந்துகள் மிச்சம் இருக்கையில் அனாயாசமாக 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது இங்கிலாந்து அணி.

இந்தியப் பந்துவீச்சைத் தவிடுபொடியாக்கி இங்கிலாந்துக்கு வெற்றி தேடித்தந்தனர் ஜானி பேர்ஸ்டோவும், பென் ஸ்டோக்ஸும். இருவரின் பார்ட்னர்ஷிப்பில் இங்குலாந்துக்கு 165 ரன்கள் சேர்ந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இமாலய இலக்கை குவிக்க கே.எல்.ராகுல் அடித்த சதம் பெரும் உதவியாக இருந்தது.

ஆனால் இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும், குருணால் பாண்டியாவும், ரசிகர்களின் மொத்த நம்பிக்கையையும் தவிடு பொடியாக்கினர். இந்தப் போட்டியில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் 8 சிக்ஸர்களை இங்கிலாந்து வீரர்கள் பறக்க விட்டனர். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் குல்தீப் யாதவ்.

முன்னதாக வினய் குமார் 7 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்ததே இந்திய பந்துவீச்சாளரின் மோசமான சாதனையாக இருந்தது. வினய் குமார் 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 7 சிக்கர்களை விட்டுக்கொடுத்தார். 2வது ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் மொத்தமாக 84 ரன்களை தாரைவார்த்தார்.

குல்தீப்பின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 4, பேர்ஸ்டோ 3, ஜேசன் ராய் ஒரு சிக்ஸர்களை பறக்க விட்டனர். இதனிடையே ஆல் ரவுண்டரான குருணால் பாண்டியா 6 ஓவர்களில் 72 ரன்களை தாரை வார்த்தார். குருணால் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் 16 ஓவர்களில் 156 ரன்களை வாரி வழங்கினர்.

இதற்கிடையே இந்தியா 336 ரன்கள் குவித்த நிலையில் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என காத்திருந்த ரசிகர்களுக்கு குல்தீப் யாதவின் பந்துவீச்சு பெரும் சோதனையைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் கடுப்பான ரசிகர்கள் பலரும் நீங்கள் என்ன கர்ணன் பரம்பரையா என ட்விட்டரில் தனக்கு அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்