எப்படி இருந்த மனுசன்.. உங்கள இப்படி பார்க்கவே ‘கஷ்டமாக’ இருக்கு.. நொறுங்கிப்போன ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் (IPL) தொடரின் 31 லீக் போட்டி இன்று (20.09.2021) அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (RCB), இயான் மோர்கன் ( Eoin Morgan) தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் (KKR) மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ஆனால் ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே எல்பிடபுள்யூ ஆகி விராட் கோலி (5 ரன்கள்) வெளியேறினார். இதனைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கலும் 22 ரன்களில் அவுட்டாகினார்.

இதனை அடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பரத் 16 ரன்களில் அவுட்டாகி வெளியேற, 51 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பெங்களூரு அணி பறிகொடுத்தது. இந்த சமயத்தில் களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் (AB de Villiers) கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே போல்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதனை அடுத்து பெரிதும் நம்பப்பட்ட மேக்ஸ்வெல் 10 ரன்களில் நடையைக் கட்டினார். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 19 ஓவர்கள் முடிவில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பெங்களூரு அணி இழந்தது.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ஆண்ட்ரே ரசல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளும், பிரஷித் கிருஷ்ணா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் 48 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 41 ரன்களும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு (Varun Chakravarthy) வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இப்போட்டியில் அடைந்த மோசமான தோல்விக்கு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியை, பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாக, கேப்டன் கோலி 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

முன்னதாக இந்த ஐபிஎல் தொடர்தான் பெங்களூரு அணிக்கு கேப்டனாக விளையாடும் கடைசி தொடர் என விராட் கோலி அறிவித்திருந்தார். இது ஆர்சிபி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின் விளையாடிய முதல் போட்டியிலேயே பெங்களூரு அணி படுதோல்வியை சந்தித்தது.

அணியின் ஒவ்வொரு வீரர்களும் அவுட்டானதை டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து விராட் கோலி சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார். இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. உற்சாகமாக இருக்கும் அவரை இதுபோல் பார்க்க வருத்தமாக உள்ளதாகவும், இந்த கஷ்டமான காலம் சீக்கிரம் மாறும் என்றும் கோலிக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்