‘மேட்சை முடிச்சிறலாம்’!.. உடனே கோலி சொன்ன ‘அந்த’ வார்த்தை.. பரபரப்பான நேரத்தில் படிக்கலுக்கு கோலி சொன்ன ‘அட்வைஸ்’ இதுதான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் முதல் சதம் அடித்த தேவ்தத் பட்டிகலிடம் கூறிய அறிவுரை குறித்து விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 16-வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக சிவம் தூபே 46 ரன்களும், ராகுல் திவேட்டியா 40 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணியைப் பொறுத்தவரை முகமது சிராஜ் மற்றும் ஹர்சல் பட்டேல் தலா 3 விக்கெட்டுகளும், வாசிங்டன் சுந்தர், கேன் ரிச்சர்ட்சன் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் பட்டிகல் களமிறங்கினர். இந்த கூட்டணியை கடைசி வரை ராஜஸ்தான் அணியால் பிரிக்க முடியவில்லை. இதனால் 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

இதில் தேவ்தத் பட்டிகல் 101 ரன்கள் அடித்து, ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதேபோல் விராட் கோலி 72 ரன்கள் அடித்து, ஐபிஎல் தொடரில் 50 அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் 6000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய கேப்டன் கோலி, தேவ்தத் பட்டிகல் சதத்தை நெருங்கும்போது கூறிய அறிவுரை குறித்து தெரிவித்தார். அதில், ‘நாங்கள் சதத்தைப் பற்றி பேசினோம். அப்போது அவர் சொன்னார், போட்டியை முடித்துவிடலாம், இதுபோல் (சதம்) பல வரும் என்று கூறினார். அப்போது நான் சொன்னேன், அது உன் முதல் சதத்தை அடித்த பின்னர்தான் வரும் என்று கூறினேன். அவரை இங்கிருந்தே உருவாக்க நினைத்தேன். மேலும் அவர் அணிக்கு மிகவும் உதவியாக இருந்தார். சதம் அடிக்க நிச்சயம் தகுதியான ஒருவர்தான். தவறுகளே இல்லாத போட்டியாக இது அமைந்தது’ என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அதேபோல் போட்டிக்கு பின் பேசிய தேவ்தத் பட்டிகல், முதலில் சதம் அடிப்பதை பற்றி நினைக்கவில்லை என்றும், ஆனால் விராட் கோலிதான் ஊக்கப்படுத்தினார் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்