‘மேட்ச்ல இல்லனா கூட தண்ணீர், கூல்டிரிங்ஸ் தூக்கிட்டு வருவார்’!.. ‘சுயநலமே இல்லாத மனுசன்’.. ஒரு வீரருக்கு மட்டும் ‘ஸ்பெஷல்’ நன்றி சொன்ன கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றபின் ஒருவருக்கு மட்டும் ஸ்பெஷல் நன்றிகளை கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை குவித்தது. இதில் ஷிகர் தவான் 98 ரன்களும், விராட் கோலி 56 ரன்களும் எடுத்தனர். அதேபோல் கே.எல். ராகுல் 62 ரன்களும் மற்றும் அறிமுக வீரர் க்ருணால் பாண்டியா 58 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, 42.1 ஓவர்களில் 251 ரன்களை மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய்-ஜானி பேர்ஸ்டோ ஜோடி 130 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்கு சோதனை கொடுத்தது. இந்த சமயத்தில் அறிமுக வீரர் பிரஷித் கிருஷ்ணா அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். இதன்பின்னர் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதில் இந்திய அணியைப் பொறுத்தவரை பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டுகளும், க்ருணால் பாண்டியா 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 94 ரன்களும், ஜேசன் ராய் 46 ரன்களும் எடுத்தனர்.

போட்டி முடிந்தபின் பேசிய கேப்டன் விராட் கோலி, ‘இந்திய அணி பெரியளவில் நல்ல வெற்றிகளை பெற்றதில்லை. ஆனால் இது ஒரு இனிமையான வெற்றி. முதலில் கொஞ்சம் அதிகமாக ரன்கள் போய்விட்டன. ஆனால் இந்திய பவுலர் மீண்டும் கம்பேக் கொடுத்தனர். ப்ரஷித், க்ருணால், ஷர்துல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். அணி மொத்தமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது’  என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘முதல் டி20 போட்டிக்கு பிறகு தவானுக்கு பெரியளவில் வாய்ப்பு கொடுக்கவில்லை. இருப்பினும் அவர் அனைத்து போட்டிகளிலும் வீரர்களுக்கு தண்ணீர், குளிர்பானம் கொண்டு வருவது, உற்சாகப்படுத்துவது என இருந்தார். இது ஒரு சிறந்த தன்மை. சுயநலம் இல்லாத மனிதர். அவர் இந்த போட்டியில் மீண்டும் தனது ஆட்டத்தை நிரூபித்துவிட்டார். ஆட்டத்தை தாண்டி அவரின் பங்களிப்பு அணிக்கு மிகப்பெரிது. அதேபோல கே.எல்.ராகுலும் நல்ல கம்பேக் கொடுத்துள்ளார்’ என விராட் கோலி பாராட்டினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்