"ஐபிஎல் 'Second Half'ல அந்த ஒரு பிளேயர் வராம போனாலும்.. நீங்க அவர கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டீங்க.." 'பிரபல' அணியின் சிக்கலை போட்டு உடைத்த 'ஆகாஷ் சோப்ரா'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் நடைபெற்று வந்த 14 ஆவது ஐபிஎல் தொடர், சில அணிகளைச் சேர்ந்த  வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள போட்டிகள் இந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இன்னும் தேதிகள் மற்றும் போட்டிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், இந்த தொடரில் சில வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

செப்டம்பர் முதல் அக்டோபர் மாதத்திற்கு இடையில், இங்கிலாந்து அணிக்கு அடுத்தடுத்து சில கிரிக்கெட் தொடர்கள் உள்ளது. இதனால், அந்த அணியைச் சேர்ந்த வீரர்கள், ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பேட் கம்மின்ஸ் (Pat Cummins), அந்த அணிக்காக ஒரு வேகப்பந்து வீச்சாளராக மட்டுமில்லாமல், ஆல் ரவுண்டராகவும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பட்டையைக் கிளப்பியிருந்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), பேட் கம்மின்ஸ் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காதது பற்றி, சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

'கொல்கத்தா அணியில் லாக்கி பெர்குசன் உள்ளார். என் கருத்துப்படி, இருவரில் ஒரு பந்து வீச்சாளரை கொல்கத்தா அணிக்காக தேர்வு செய்ய வேண்டுமென்றால், நான் கம்மின்ஸிற்கு பதிலாக, பெர்குசனை தான் தேர்வு செய்வேன். பெர்குசன் மீதமுள்ள போட்டிகளில் கலந்து கொள்வார் என்றால், கொல்கத்தா அணி நிச்சயம் கம்மின்ஸை, பந்து வீச்சாளராக மிஸ் செய்யாது.

ஒரு பந்து வீச்சாளர் என்ற முறையில், கம்மின்ஸின் செயல் திறன் அவ்வளவு சிறப்பாக ஒன்றும் அமையவில்லை. கடந்த ஆண்டில், 14 போட்டிகளில் ஆடிய கம்மின்ஸ், 12 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார். சென்ற முறை ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற அதே ஐக்கிய அரபு அமீரகத்தில் தான், எஞ்சிய போட்டிகளும் நடைபெறுகிறது.


அவரது பவுலிங் எகானமி நன்றாக தான் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு 7 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் தான் எடுத்துள்ளார். அதிக விலைக்கு வாங்கிய வீரர் என்ற நிலையில், அவரது பவுலிங் எகானமியும் இந்தாண்டு அதிகமாக உள்ளது' என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்