இங்கிலாந்தில் 'கோலி'க்கு இருக்கும் 'சிக்கல்'.. "மாத்திக்காம இருந்தா அவருக்குத் தான் 'பிரச்சனையே'.." 'ஐடியா' கொடுத்த 'முன்னாள்' வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, ரசிகர்கள் மத்தியில் தற்போதே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர், சமீப காலமாக அதிக துடிப்புடன் ஆடி வரும் நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இங்கிலாந்து தொடரிலும், அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், அதே வேளையில் அனைவரது கவனமும் கேப்டன் கோலியின் பேட்டிங் மீதும் உள்ளது.


இங்கிலாந்து மைதானங்களில், 2 டெஸ்ட் தொடர்கள் ஆடியுள்ள கோலி, 2014 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த டெஸ்ட் தொடரில், 10 இன்னிங்ஸ்களில் 134 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால், 2018 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தில், 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கோலி, 2 சதங்களுடன் 593 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்தில் 3 ஆவது டெஸ்ட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள கோலிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் (Kapil Dev), கோலிக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 'விராட் கோலி சற்று நிதானமாக ஆட வேண்டும். அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அவர் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆரம்பத்திலேயே காட்டக் கூடாது.

ஏனென்றால், இங்கிலாந்து மாதிரியான ஆடுகளங்களில், முதலில் இருந்தே ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் ஆடுவது நிச்சயம் எடுபடாது. பொறுமையாக பந்தை கவனித்து, நிதானமாக ஆடி ரன்கள் குவிக்க வேண்டும். அப்படி பொறுமையைக் காட்டி ஆடினால் மட்டுமே, இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் அதிக ரன்களைக் குவித்து அசத்த முடியும்' என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இங்கிலாந்து மைதானங்கள் குறித்து பேசிய கபில் தேவ், 'இங்கிலாந்து அணியை அவர்களது மண்ணிலேயே சமாளிப்பது என்பது மிகவும் கடினம் என்பதை இந்திய அணி நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், சொந்த மைதானங்களில் அவர்கள் மிகவும் பலமானவர்கள். அதே போல, இங்கிலாந்து பிட்ச்களுக்கு ஏற்ற வகையில், இந்திய பந்து வீச்சாளர்கள் எப்படி தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும் மிக முக்கியம்.

அங்கு ஸ்விங் பந்துகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இதனால், அந்த விஷயத்தில் இந்திய அணியை விட இங்கிலாந்து அணி ஒரு படி மேலே இருக்கும்' என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்