‘வேண்டாம் சாஹா.. அது வேஸ்ட்’!.. சிஎஸ்கே ரசிகர்கள் கூட இவரை பிடிக்கலைன்னு சொல்ல மாட்டாங்க.. வில்லியம்சன் எடுத்த சூப்பர் முடிவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் எடுத்த முடிவு ஒன்று ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் (IPL) தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனால் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக விக்கெட் கீப்பர் சாஹா மற்றும் இளம் வீரர் ஜேசன் ராய் களமிறங்கினர். அதில் 2 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோஸ் ஹேசல்வுட் வீசிய ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஜேசன் ராய் வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த சாஹா அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.

அப்போது பிராவோ (Bravo) வீசிய 7-வது ஓவரில் கேன் வில்லியம்சன் (Kane Williamson) எல்பிடபுள்யூ ஆகி அவுட்டானார். உடனே மறுமுனையில் இருந்த சாஹா, கேன் வில்லியம்சனை ரியூவி கேட்க கூறினார். ஆனால், அது அவுட்தான் என்று உறுதியாக நம்பிய கேன் வில்லியம்சன் ரிவியூ வேண்டாம் எனக் கூறிவிட்டு சென்றார்.

இதனை அடுத்து ரீப்ளேவில் பார்த்தபோது, பந்து பேட்டில் படாமல் நேராக காலில் பட்டது தெளிவாக தெரிந்தது. சரியாக கணித்து கேன் வில்லியம்சன் எடுத்த முடிவால், ஹைதராபாத் அணிக்கு ஒரு ரிவியூ பறிபோகாமல் இருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது. இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் சாஹா 44 ரன்கள் எடுத்தார். சென்னை அணியைப் பொறுத்தவரை ஜோஸ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளும், பிராவோ 2 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து விளையாடிய சென்னை அணி, 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் (Playoffs) சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக சிஎஸ்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்