"இது எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல பாத்துக்கோங்க..." 'இந்திய' அணியின் செயலால் கடுப்பான 'ஆஸ்திரேலிய' பயிற்சியாளர்... 'பரபர' சம்பவம்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதிய முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்திருந்த நிலையில், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ராகுல் அரை சதமடித்து அசத்தியிருந்தார். இறுதியில் ஜடேஜாவும் அதிரடி காட்ட, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

இதனிடையே, ஜடேஜா பேட்டிங் செய்த போது இறுதி ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்து அவரது ஹெல்மெட்டில் பட்டுத் தாக்கியது. ஏற்கனவே தசை பிடிப்பால் ஜடேஜா அவதிப்பட்டு வந்த நிலையில், தலையில் எதாவது காயம் ஏற்பட்டிருக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும், மீதமிருந்த பந்துகளை பேட்டிங் செய்த பின்னரே ஜடேஜா வெளியேறினார். இதன் பிறகு, அவருக்கு பதிலாக மாற்று வீரராக சாஹல் அணியில் இணைந்தார். ஜடேஜாவுக்கு மாற்று வீரர் வேண்டும் என்ற இந்திய அணியின் கோரிக்கையை ஆட்ட நடுவர் ஏற்றுக் கொண்டு சாஹலை ஆட அனுமதித்தார்.

போட்டியின் பாதியில் இறங்கிய சாஹலை ஜடேஜாவுக்கு பதிலாக பந்து வீசவும் போட்டி நடுவர்கள் அனுமதியளித்தனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் சாஹல். அதே போல, ஆட்டநாயகன் விருதும் சாஹலுக்கு கிடைத்தது. இந்நிலையில், ஜடேஜாவிற்கு மாற்று வீரராக சாஹல் பந்து வீச களமிறங்க வைத்ததற்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். போட்டி நடுவரிடம் இதுகுறித்து பேசிய லாங்கர், தனது அதிருப்தியையும் காட்டியுள்ளதாக தெரிகிறது.

ஜடேஜாவுக்கு உண்டான காயம் குறித்து எதுவும் வெளிப்படையாக தெரியாத நிலையில், அவருக்கு சமமான ஒரு வீரரை இறக்காமல், சுழற்பந்து வீச்சில் சிறந்து விளங்கும் சாஹலை பந்து வீச வைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே வேளை, ஜடேஜா இல்லாமல் போனது ஒரு பந்து வீச்சாளரை இந்திய அணியில் குறைத்தது. இதன் விளைவாக தான் சாஹல் களமிறங்க அனுமதி வழங்கப்பட்டது என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனினும், இந்த செயல் ஐசிசி விதிமுறைகள் மீது கடும் விவாதங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்