இங்கிலாந்தை சைலண்டா சமாதானப்படுத்தும் பிசிசிஐ.. 2 ‘சூப்பர்’ ஆஃபரை வழங்கிய ஜெய் ஷா.. என்ன செய்ய போகிறது இங்கிலாந்து..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு இரண்டு ஆஃபர்களை பிசிசிஐ வழங்கியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சர்ச்சையில் முடிந்துள்ளது. இதுவரை நடந்து முடிந்த 4 போட்டிகளில் 2 வெற்றியுடன், 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடைபெற இருந்த கடைசி டெஸ்ட் போட்டி திடீரென ரத்து செய்யப்பட்டது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் பிசியோ நிதின் படேல் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து இந்திய அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அனைவருக்கும் நெகட்டிவ் என முடிவு வந்தது. ஆனாலும் வீரர்களின் பாதுகாப்பு கருதி கடைசி டெஸ்ட் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்தது. இதனைத் தொடர்ந்து போட்டியை ரத்து செய்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க வெற்றியாளர் யார்? என குழப்பம் நீடித்து வருகிறது. கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியாதான் ரத்து செய்ய கோரியதால், தங்களை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் என ஐசிசிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பிசிசிஐ ஒரு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. அப்போது, ரத்தான இந்த டெஸ்ட் போட்டியை நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு இரண்டு ஆஃபர்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடத்தப்படவுள்ளது. தற்போது கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், பிசிசிஐ 2 சலுகைகளை வழங்கியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20 போட்டிகளுக்கு பதிலாக கூடுதலாக 2 போட்டிகள் சேர்த்து மொத்தம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்படும். இது வேண்டாம் என்று கருதினால், ரத்து செய்யப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடும்’ என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்