இவ்ளோ பாதுகாப்பையும் மீறி எப்படி உள்ள வந்தாரு..? வசமாக சிக்கிய ஜார்வோ.. எடுக்கப்பட்ட அதிரடி ஆக்‌ஷன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து இடையூறு செய்து வந்த ஜார்வோ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 50 ரன்களும், ஷர்துல் தாகூர் 57 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஒல்லி போப் 81 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். தற்போது இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ திடீரென மைதானத்துக்குள் நுழைந்தார். கையில் பந்துடன் வேகமாக ஓடி வந்த அவர், நேராக பிட்சுக்கு சென்று பவுலிங் வீசினார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவை இடித்துவிட்டார். இதனால் அவர் சற்று பயந்துபோனார்.

இதனை அடுத்து வேகமாக வந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜார்வோவை மைதானத்தை விட்டு வெளியேற்றினர். இவர் இதற்கு முன்னதாக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினருடன் பீல்டிங் செய்ய மைதானத்துக்குள் நுழைந்தார். இதனைத் தொடர்ந்து லீட்ஸ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டில் பேட்டிங் செய்ய பேட்டுடன் மைதானத்துக்குள் நுழைந்துவிட்டார்.

இவ்வளது பாதுகாப்புகளையும் மீறி, தொடர்ந்து 3 முறையாக ஜார்வோ மைதானத்துக்குள் நுழைந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுபோல் மீண்டும் நடக்காமல் இருக்க அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் ரசிகர் ஜார்வோ கைது செய்யப்பட்டுள்ளதாகவும், லண்டன் காவல் நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்