‘கப்பு முக்கியம் பிகிலு’!.. தனி ஒருவனாக வெறித்தனமான ப்ராக்டீஸ்.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ‘ஸ்டார்’ ப்ளேயர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா- நியூஸிலாந்து மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதற்காக மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய வீரர்கள், கடந்த 3-ம் தேதி இங்கிலாந்துக்கு தனி விமானம் மூலம் சென்றனர். அங்கு மேலும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

இது மிக முக்கியமான போட்டி என்பதால் 3 நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு 4-வது நாளில் இருந்து இந்திய வீரர்கள் பயிற்சியை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் ஒரு முக்கிய நிபந்தனையாக, தனிமைப்படுத்தப்படும் 3 நாட்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் முடிவு நெகட்டிவ் என வந்தால் மட்டுமே வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா நேற்று தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். தற்போது வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், மைதானத்தில் தனி ஆளாக பந்து வீசி பயிற்சியை மேற்கொண்டார். இங்கிலாந்து மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது எனக் கூறப்படும் நிலையில், சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின்-ஜடேஜா ஜோடியை பயன்படுத்த இந்திய அணி திட்டம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது நியூஸிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நியூஸிலாந்து வீரர்களின் ஆட்டம் இருந்தது.

குறிப்பாக நியூஸிலாந்து அணியின் அறிமுக வீரர் டெவன் கான்வே, தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 200 ரன்கள் அடித்து அசத்தினார். அதேபோல் பந்துவீச்சில் டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து வீரர்கள் இந்திய அணிக்கு சவால் அளிக்கும் வகையில் இருப்பார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்