"அவருகிட்ட 'தோனி' மாதிரி 'திறமை' எல்லாம் இருக்கு.. அதுக்குன்னு இப்போவே தூக்கி வெச்சு பேசுறது மட்டும் வேணாம்.." கறாராக சொன்ன 'முன்னாள்' வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக, கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதனிடையே, இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது பற்றி, தற்போதே பல பேச்சுகள் வலம் வந்த வண்ணமும் உள்ளது. மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், இந்திய அணியின் கேப்டனாக தற்போது விராட் கோலி (Virat Kohlli) செயல்பட்டு வருகிறார். 32 வயதாகும் கோலி, தற்போதும் ஃபிட்னஸ்ஸுடன் இருப்பதால், இன்னும் 8 முதல் 9 ஆண்டுகள், சர்வதேச போட்டிகளில் அவர் ஆடுவார் என தெரிகிறது.

ஆனால், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அவரால் தொடர்ந்து கேப்டனாக செயல்பட முடியாது என்றும், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்றும், பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், ஐபிஎல் போட்டிகளில், கோலியை விட சிறந்த கேப்டனாக, ரோஹித் வலம் வருகிறார்.

இதனால், டி 20 போட்டிகளில், தற்போதே இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் செயல்படலாம் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், ரோஹித், கோலி ஆகியோருக்கு பிறகு, இளம் வீரர் ரிஷப் பண்ட் தான் இந்திய கேப்டன் பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என்பது பற்றியும், பல முன்னாள் வீரர்கள் வரை குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு காரணம், சமீபத்தில் நடைபெற்றிருந்த ஐபிஎல் போட்டிகளில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அவர் வழிநடத்திய விதம் தான்.

ஷ்ரேயாஸ் ஐயர் காயமடைந்ததன் காரணமாக, டெல்லி அணியை இந்த சீசனில் வழிநடத்திய ரிஷப் பண்ட், தனது பணியை மிகச் சிறப்பாக செய்திருந்தார். அது மட்டுமில்லாமல், புள்ளிப் பட்டியலிலும் டெல்லி அணி தான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான சபா கரீம் (Saba Karim), ரிஷப் பண்ட் இந்திய அணியின் கேப்டன் ஆவது பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

'இந்திய அணியை வருங்காலத்தில், ரிஷப் பண்ட் வழிநடத்துவாரா என்பது பற்றி தற்போதே பேசுவது, சரியல்ல என நான் நினைக்கிறேன். அதற்கான திறமை அவரிடம் உள்ளது. அவர் பேட் செய்யும் விதம், அணியை தலைமை தங்குவது என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார். ஆட்டத்தில் அவர் இருக்கும் போது, எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறார். சக வீரர்களும் தன்னுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும் என அவர் நினைக்கிறார்.

செயல்பாடு மற்றும் முடிவுகள் எடுப்பது என அனைத்திலும் தோனியின் கேப்டன்சி குணங்கள் சிலவற்றை, நான் ரிஷப் பண்ட்டிடம் பார்க்கிறேன். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தனது இடத்தை முதலில் அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், தற்போது அணியில் ரோஹித் மற்றும் கே எல் ராகுல் உள்ளனர். அதன் பிறகு தான் ரிஷப் பண்ட் உள்ளார். எனவே அவர் தொடர்ந்து அணியில் இருக்க வேண்டும் என்பதை பண்ட் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

என்னை பொறுத்தவரையில், டி 20 போட்டிகளில் இன்னும் சில இடங்களில் ரிஷப் பண்ட் கவனம் செலுத்த வேண்டியுள்ளது' என சபா கரீம் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்