தனி ஆளாக ‘கெத்து’ காட்டிய சின்னப்பையன்.. ‘தல’, ‘சின்ன தல’-யே இவரோட ஓவர்ல விளையாட திணறிட்டாங்க.. யார் இந்த சக்காரியா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை அணியின் 3 முன்னணி வீரர்களின் விக்கெட்டை ராஜஸ்தான் அணியின் இளம்வீரர் சேதன் சாகரியா வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 12-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்றார். மும்பை மைதானம் சேஸ் செய்வதற்கு எளிதாக இருக்கும் என்பதால் அவர் பவுலிங்கை தேர்வு செய்தார். இது சிஎஸ்கே அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஆனால் இதை பொய்யாக்கும் வகையில் ஆரம்பம் முதலே சென்னை அணி அதிரடி காட்ட ஆரம்பித்தது. அதிகமாக ரன்கள் சேர்த்தால் ராஜஸ்தான் அணிக்கு சேஸ் செய்ய கடினமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்னை அணி விளையாடியது. அதனால் களமிறங்கிய அனைத்து வீரர்கள் அதிரடியாக விளையாடினர். ஆனால் யாருமே 35 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. டு பிளசிஸ் மட்டுமே அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்திருந்தார். ஆனாலும் 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்களை சிஎஸ்கே அணி குவித்தது.

சத்தமே இல்லாம ஸ்கோர் உயர்ந்தது ராஜஸ்தான் அணிக்கு சற்று அதிர்ச்சி அளிக்கும் வகையிலேயே இருந்தது. இதில் கடைசி கட்டத்தில் களமிறங்கிய சாம் கர்ரன் 6 பந்துகளில் 13 ரன்களும், பிராவோ 8 பந்துகளில் 20 ரன்களும் அடித்தது சென்னை அணிக்கு போனஸ் ரன்களாக அமைந்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களுக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் மட்டுமே 49 ரன்கள் அடித்தார். சென்னை அணியைப் பொறுத்தவரை மொயின் அலி 3 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளும், பிராவோ மற்றும் ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இப்போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம்வீரர் சேத்தன் சக்காரியாவின் பந்து வீச்சு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இவர் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களான தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் அம்பட்டி ராயுடு ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நேற்று ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய ஒரே வீரர் சேத்தன் சக்காரியாதான். 4 ஓவர்கள் வீசிய இவர் 36 ரன்கள் விட்டுக்கொடுத்தார். சென்னை அணியி ஸ்கோர் 200-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிடில் ஓவர்களில் அதிக ரன்கள் செல்லவிடாமல் சக்காரியாக கொஞ்சம் கட்டுப்படுத்தினார். இவரின் ஓவரில் கிரிக்கெட் ஜாம்பவான்களான தோனி, ரெய்னா போன்ற வீரர்களே சற்று திணறினர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரை அடுத்து வர்தேஜ் கிராமத்தைச் சேர்ந்தார் 23 வயதான சேத்தன் சக்காரியா. இவரது அப்பா வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். ஐபிஎல் ஏலம் நடைபெற்ற சில வாரங்களுக்கு முன்னதாக சக்காரியாவின் அண்ணன் சில பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். தந்தையால் சரியாக வேலை செய்ய முடியாததால், கிடைக்கின்ற வேலைக்கு சென்று குடும்பத்தைக் கவனித்துக் கொண்டும், கிரிக்கெட் பயிற்சியையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியில், ராஜஸ்தான் அணி ரூ.1.20 கோடிக்கு சக்காரியாவை எடுத்தது. இவ்வளவு விலை கொடுத்தது வீண்போகவில்லை என்பது ஒவ்வொரு போட்டியிலும் சக்காரியா நிரூபித்து வருகிறார்.

இப்போட்டி முடிந்த பின் தோனியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை சக்காரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘சின்ன வயதில் இருந்தே உங்களை பார்த்துதான் வளர்ந்தேன். இன்று உங்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இது என் வாழ்க்கையின் மிக சிறந்த தருணம். இதை என்றும் போற்றுவேன். உங்களைப் போன்று எவரும் இருக்கமாட்டார்கள். வாழ்க்கை முழுவதும் பலரை ஊக்கப்படுத்தி வருவதற்கு நன்றி’ என தோனியை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்