"என்னோட கடைசி 'மேட்ச்'ல இப்டி பண்ணிட்டியே..." தோனி கூறிய 'விஷயம்'... உருக்கத்துடன் வெளியிட்ட 'இஷாந்த் ஷர்மா'... வருந்திய 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு இது 100 - ஆவது போட்டியாகும். இதற்கு முன்பு வரை, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் கபில் தேவ் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனையடுத்து, நூறு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் இரண்டாவது வீரர் என்ற பெருமையை இஷாந்த் ஷர்மா பெறவுள்ளார்.

இந்நிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி குறித்து இஷாந்த் ஷர்மா தெரிவித்துள்ள கருத்து ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2013 - 2014 ஆம் ஆண்டின் போது நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக ஆடியது. தோனியின் கேப்டன்சியும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.

இதனால், அந்த டெஸ்ட் தொடரின் பாதியில், தனது ஓய்வை அறிவித்து விட்டு இந்தியா திரும்பினார் தோனி. அந்த போட்டியில், தோனி, இஷாந்த் ஷர்மாவிடம் என்ன கூறினார் என்பதை, அவர் தற்போது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் யூ டியூப் சேனலில் அளித்த பேட்டியின் போது பகிர்ந்துள்ளார்.

'தோனி கடைசியாக ஆடிய டெஸ்ட் போட்டியின் போது, எனக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அதனால், உடலில் ஊசி போட்டுக் கொண்டு தான் நான் பந்து வீசினேன். இருந்த போதும், நான்காவது நாள் ஆட்டத்தில் எனக்கு வலி அதிகமாக இருந்தது. என்னால் வலியை தாங்க முடியாததால், நான் தோனியிடம் சென்று என்னால் பந்து வீச முடியாது என கூறினேன்.

அப்படி என்றால் நீ பந்து வீச வேண்டாம் என அவர் கூறினார். அதன் பிறகு, என்னை கைவிட்டு விட்டாய் என கூறினார். எனக்கு அப்போது ஒன்றுமே புரியவில்லை. மீண்டும் அவர், எனது கடைசி போட்டியில் என்னை கைவிட்டு விட்டாய் என உருக்கமாக குறிப்பிட்டார். என்னால் நம்பவே முடியவில்லை. அது அவரது கடைசி டெஸ்ட் போட்டி என்பது எனக்கு மிகபெரிய அதிர்ச்சியாக இருந்தது. முன்னரே தெரிந்திருந்தால் நான் நிச்சயம் தொடர்ந்து பந்து வீசியிருப்பேன். அணியிலிருந்த மற்ற வீரர்களுக்கும் தோனி ஆடப் போகும் கடைசி டெஸ்ட் போட்டி இது என்பது தெரியாது. இதனை அறிந்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்' என மிகவும் உருக்கத்துடன் இஷாந்த் ஷர்மா குறிப்பிட்டார்.

மேலும், 'தோனி நினைத்திருந்தால் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடியிருக்க முடியும். ஆனால், அவர் எப்போதும் இந்திய அணியின் நலன் எது என்பதை மட்டுமே சிந்திப்பார். 'இனி இந்தியாவில் நிறைய டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளது. அடுத்த விக்கெட் கீப்பர் சஹா அதிகம் தயாராக வேண்டும்' என தோனி என்னிடம் கூறியிருந்தார். அதனை மனதில் வைத்து தான் தோனி ஓய்வை அறிவித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்' எனவும் இஷாந்த் ஷர்மா மேலும் உருக்கமாக, தோனி குறித்த கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்