என்னங்க சொல்றீங்க..! மனுசன் இப்போதான் ஒரு ‘ஷாக்’ கொடுத்தாரு.. அதுக்குள்ள இன்னொன்னா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது.

இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி சமீபத்தில் அறிவித்தார். இவர் தலைமையிலான இந்திய அணி, வெளிநாட்டு மைதானங்களில் பல வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ளது.

ஆனாலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட கைப்பற்றியதில்லை. ஒருநாள் உலகக்கோப்பை தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் போன்ற முக்கியமான போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் விராட் கோலியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்த சூழலில் வரும் அக்டோபரில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருடன், டி20 இந்திய அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கோலியின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

ஐசிசி கோப்பையை போன்றே, ஐபிஎல் கோப்பையையும் விராட் கோலி இதுவரை வென்றதில்லை. கடந்த 2013-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் முடிவிலும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் பெங்களூரு அணி தொடர்ந்து வெளியேறி வருகிறது. அதனால் விராட் கோலியின் மீது பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்க்சர்கார் (Dilip Vengsarkar), விராட் கோலியின் கேப்டன்ஷி குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்தில் பேட்டியளித்துள்ளார். அதில், ‘எட்டு வருடங்களாக இந்திய அணியை வழி நடத்திக்கொண்டு, நம்பர்.1 பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். கோலிக்கு நிறைய அழுத்தம் இருக்கிறது, ஏனென்றால் ஒவ்வொரு முறை அவர் பேட்டிங் செய்யும்போதும் நாம் அதிகமாக அவரிடம் எதிர்பார்க்கிறோம்.

கோலி இந்த நேரத்தில் எடுத்த முடிவு மிகச்சரியானது. டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என நான் நம்புகிறேன். டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக கோலி சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடர். இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அவர் ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்கவில்லை. அதனால் அந்த அணியிலும் கேப்டன் பொறுப்பில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறேன்’ என திலீப் வெங்க்சர்கார் கூறியுள்ளார்.

முன்னதாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் மாற்றம் வரவுள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் இவை அனைத்திற்கு பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் (Arun Dhumal) மறுப்பு தெரிவித்தார். இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றால் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் மாற்றம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, 5-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்