"அவரை ஏன் ஒதுக்குறீங்க??... ஒரு தடவ 'சான்ஸ்' கொடுத்து பாருங்க..." 'இர்பான் பதான்' கருத்தால் 'பரபரப்பு'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டதால் அவர்களுக்கு பதிலாக, இளம் வீரர்களை அணியில் இடம்பெற்றிருந்தனர்.

இந்திய டெஸ்ட் அணியில் அதிக அனுபவமுள்ள சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் அணியில் இடம்பிடித்திருந்த போதும் அவரை ஆடும் லெவனில் இந்திய அணி எடுக்கவில்லை. இதனால், இந்திய அணியின் முடிவு கடும் விமர்சனத்துக்குள் ஆனது. ஆனால், இளம் வீரர்களைக் கொண்டே வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்திய அணி பெற்றது.

இதனையடுத்து, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் பும்ரா, அஸ்வின் ஆகியோர் குணமடைந்து திரும்பியுள்ளதால் இந்த தொடரிலும் குல்தீப் யாதவ் புறக்கணிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீண்ட காலமாக, அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது தற்போது பலரின் கேள்வியாகவும் அமைந்துள்ளது.

இந்நிலையில், குல்தீப் யாதவிற்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். 'நீண்ட நாட்களாக ஆடாமல் இருக்கும் வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும். இம்முறை குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். கடந்த முறை, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் அதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டனர்.

குல்தீப் யாதவ் ஒன்றும் திறமையில்லாத வீரர் கிடையாது. அணி நிர்வாகம் இவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவரை போன்ற இடதுகை மணிக்கட்டு பந்து வீச்சாளரை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் அவர் அற்புதமாக பந்து வீசுவார் என நம்புகிறேன். குல்தீப், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் என மூன்று சுழற்பந்து வீச்சாளராகள் முதல் போட்டியில் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும்.

காரணம், சென்னை மைதானத்தில் சுழற்பந்து நன்றாக எடுபடும். அது மட்டுமில்லாமல், அஸ்வின், சுந்தர் ஆகியோர் சிறப்பாக பேட்டிங்கும் செய்யக்கூடியவர்கள். மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது போல, மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை இறக்குவது நல்ல முடிவாக இருக்கும்' என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்