மொத்த பழியையும் ‘ஜாதவ்’ மேல போடாதீங்க.. திடீர்னு தோனி பக்கம் ‘திரும்பும்’ நெட்டிசன்கள்.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி எடுத்த சில முடிவுகளும் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 167 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த தோல்விக்கு கேதர் ஜாதவ்தான் காரணம் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். கேதர் ஜாதவ் செய்த மோசமான பேட்டிங்கே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. ஏனென்றால் ஜாதவ் பேட்டிங் செய்ய வந்தபோது சென்னை அணி 21 பந்துகளில் 39 ரன்கள் அடிக்க வேண்டும் என இருந்தது. இது சிஎஸ்கேவுக்கு வெற்றி பெற வாய்ப்பாகவே காணப்பட்டது.

இதனை அடுத்து கடைசி ஓவரில் 30 ரன்கள் அடித்தால் வெற்றி நிலையில் சென்னை அணி இருந்தது. இந்த சமயத்தில் கடைசி ஓவரின் முதல் பந்தை கேதர் ஜாதவ் சந்தித்தார். 30 ரன்கள் தேவைப்படுவதால் அடித்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பந்தை தட்டிவிட்டு ரன் ஏதும் எடுக்க ஓடாமல் ஜாதவ் நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுமுனையில் நின்ற ஜடேஜாவுக்கு ஸ்ட்ரைக் கொடுத்திருந்தால் கூட வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இப்போட்டியில் 12 பந்துகளை எதிர்கொண்ட கேதர் ஜாதவ் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேவேளையில் ஜடேஜா 8 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சிஎஸ்கேவின் தோல்விக்கு கேதர் ஜாதவ் மட்டுமே காரணம் இல்லை என்றும், தோனி எடுத்த சில தவறான முடிவுகளும் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. முதலாவதாக பேட்டிங் ஆர்டரை மாற்றியது. நேற்றைய போட்டியில் 10-வது ஓவருக்கு பின் கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர்கள் சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு நிறைய ஓவர்கள் மீதமிருந்தன. இந்த சமயத்தில் தோனி களமிறங்கினார். தோனி மற்றும் வாட்சன் ஸ்பின் பவுலிங்கில் சற்று திணறக் கூடியவர்கள். அதேபோல் வாட்சன் சுனில் நரேன் ஓவரிலும், தோனி வருண் சக்கரவர்த்தி ஓவரிலும் அவுட்டாகி வெளியேறினர்.

இதனை அடுத்து மிடில் ஆர்டரில் களமிறங்கிய தோனி ரன் எடுக்காமல் விட்டதும் காரணமாக கூறப்படுகிறது. மிடில் ஓவர்களில் சென்னை அணி 30 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் தோனி 12 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஸ்பின் பவுலர்களுக்கு ஓவர் இருக்கும்போது பிராவோவை களமிறக்காமல் கேதர் ஜாதவை தோனி களமிறக்கியதும் காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை அணியின் தோல்விக்கு கேதர் ஜாதவ் மட்டுமல்லாமல் கேப்டன் தோனியும் ஒரு காரணம் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்