'எப்பா... போதும்பா சாமி!.. இதுக்கு மேல முடியாது'!.. 'ஏன் 'இந்த' தப்ப பண்ணீங்க'?.. கடும் நெருக்கடியில் ஹைதராபாத் அணி!.. மீண்டும் கோட்டைவிட்டது எப்படி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி மிக மோசமான தோல்வியை அடைந்ததுள்ளது. இது அந்த அணிக்கு இந்த சீசனில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

14வது ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குவிண்டன் டி காக் 40 ரன்களும், ரோஹித் சர்மா 32 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.

இதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தாலும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கீரன் பொலார்டு 22 பந்துகளில் 35 ரன்கள் அடித்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 150 ரன்கள் எடுத்தது.

ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக முஜிபுர் ரஹ்மான் மற்றும் விஜய் சங்கர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர், 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் 36 ரன்களும், ஜானி பாரிஸ்டோ 43 ரன்களும் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

ஆனால், அடுத்தடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் (28) மற்றும் விராட் சிங் (11) ஆகியோரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.

இதனால் 19.4 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வியும் அடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ராகுல் சாஹர் மற்றும் டிரண்ட் பவுல்ட் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்தநிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. அதே போல் வெற்றிக்கு காரணமாக ராகுல் சாஹர், டிரண்ட் பவுல்ட் போன்ற வீரர்களை முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அதேவேளையில், வெறும் 151 ரன்னை கூட அடிக்கா முடியாமல் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சமூக வலைதளங்களில் கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கடந்த போட்டியிலேயே சன்ரைசர்ஸ் அணியின் மிடில் ஆர்டர் வலுவாக இல்லை என்பது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு தீர்வாக கேன் வில்லியம்சனை மிடில் ஆர்டரில் இறக்கலாம் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடவில்லை. இந்த நிலையில் தான், 150 ரன்கள் என்ற எளிய இலக்கை அடைய முடியாமல் சன்ரைசர்ஸ் அணி ஆல் அவுட்டானது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ஹைதராபாத் அணியை, முன்னாள் வீரர்களோடு சேர்ந்து அந்த அணியின் ரசிகர்களே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்