"அந்த ஒன்ன மட்டும் பண்ணியிருந்தோம்... போட்டியவே புரட்டிப் போட்டிருக்கலாம்!"... 'தோல்விக்குப்பின் புலம்பிய கோலி!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி மோசமாக பேட்டிங் செய்து தோல்வி அடைந்ததால் தொடரை விட்டே வெளியேறியுள்ளது.

நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி மோசமாக பேட்டிங் செய்து 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இப்படி முதலில் குறைவான ஸ்கோர் எடுத்த போதே அந்த அணி வெற்றி பெறுவது கடினம் என கணிக்கப்பட்டது. இதையடுத்து சேஸிங் செய்த ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் 17, கோஸ்வாமி டக் அவுட் ஆக, அடுத்து பொறுப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் அணியை வெற்றி பெற வைக்க போராடினார். அவர் நிதான ஆட்டம் ஆடியதால், அவர் விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றிக்கு அருகே செல்லலாம் என்பதால் பெங்களூர் அணி மிகவும் போராடியது.

அப்போது கேன் வில்லியம்சன் சிக்ஸ் அடிக்க முயற்சிக்க அந்த பந்தை பவுண்டரி எல்லையில் இருந்த தேவ்தத் படிக்கல் பிடிக்க பார்த்தும் தவறவிட்டார். அதன்பின் கேன் வில்லியம்சன் அரைசதம் அடிக்க, ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதாவது முன்னதாக அந்த கடினமான கேட்ச்சை பிடித்து இருந்தால் போட்டியே திசை மாறி இருக்கலாம். இதையடுத்து போட்டிக்குப்பின் பேசியுள்ள விராட் கோலி, "இந்தப் போட்டியில் வில்லியம்சனுடைய கேட்ச்சைத் தவறவிட்டதற்கான விலையாக நாங்கள் வெற்றியை இழந்துவிட்டோம். அந்த கேட்ச்சை நாங்கள் தவறவிடாமல் இருந்திருந்தால் ஆட்டமே திசைமாறியிருக்கும்.

முதல் இன்னிங்ஸைப் பற்றிப் பேசினால், நாங்கள் வெற்றியைத் தக்கவைக்கும் அளவுக்குப் போதுமான ரன்கள் குவிக்கவில்லை. ஆனால் 2வது பாதியில் நாங்கள் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடினோம். அதை நோக்கித்தான் நகர்ந்தோம்.நாக்அவுட் போட்டி என்பதால் பதற்றமாகவும், ஒருவிதமான அச்சத்தாலும் பேட்ஸ்மேன்கள் இருந்திருக்கலாம். இருப்பினும் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு போதுமான அளவு அழுத்தங்களையும் நாங்கள் கொடுக்கவில்லை.

இந்தத் தொடரில் சாதகமான விஷயம் என்னவென்றால் தேவ்தத் படிக்கல் சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். முதல் தொடரிலேயே 400 ரன்களுக்கு மேல் குவித்து, சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்து திறமையை நிரூபித்துள்ளார். அவரை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அதேபோல முகமது சிராஜ் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சாஹல், டிவில்லியர்ஸ் இருவரிடம் இருந்தும் எப்போதும் சிறப்பான பங்களிப்பைக் காண முடியும். உள்நாட்டில் ஐபிஎல் போட்டி நடக்காமல் வெளிநாட்டில் நடந்ததால்தான் இந்த அளவுக்குக் கடும் போட்டியாக மாறியுள்ளது. ஐபிஎல் அணிகளின் வலிமையையும் இந்தத் தொடர் எடுத்துக் காட்டியுள்ளது. ஒவ்வொரு அணியிலும் வலிமையான, திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். எந்தப் போட்டியும் யாருக்கும் சாதகமாக இல்லாமல் கடும் சவாலாகவே இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்