'கோடிகள கொட்டி ஏலத்தில எடுக்குறீங்க... எதுக்கு'?.. 'வெளிய சும்மா உட்காரவா'?.. ஸ்டார் வீரர்கள் குறித்து மஞ்சரேக்கர் காட்டம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில், முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் அணியில் கிடைக்காமல் வெளியே உட்கார்ந்திருப்பது வெட்கக்கேடானது என்று சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசியுள்ளார்.

ஐபிஎல் 2021 தொடர் சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், உச்சக்கட்ட பாதுகாப்பான பயோ-பபுள் கட்டமைப்பையும் உடைத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள், சன் ரைசர்ஸ் அணி வீரர்கள், சில கொல்கத்தா அணி வீரர்கள் என்று கொரோனா அடுத்தடுத்து அணிகளுக்குள் பரவத் தொடங்கியது.

இதனால் அரண்டு போன பிசிசிஐ, 31 ஆட்டங்கள் மீதமிருக்கையில் ஐபிஎல் போட்டிகளை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. மீதமுள்ள போட்டிகள் எப்போது தொடங்கும், எங்கு தொடங்கும் என்பதில் இப்போது வரை குழப்பம் நீடித்து வருகிறது. பிசிசிஐ தரப்பிலிருந்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
அக்டோபருக்கு பிறகு மீண்டும் போட்டிகள் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இந்த சூழலில், அடுத்த ஆண்டு, ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக 2 அணிகளை சேர்க்கும் முடிவில் பிசிசிஐ இருப்பதாக தெரிகிறது. 

2008 ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல், ஒவ்வொரு தொடரிலும் 8 அணிகள் பங்கேற்று வருகின்றன. சூதாட்டப்புகார் தொடர்பாக 2016ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகாலம் தடை விதிக்கப்பட்ட போது, 8 அணிகள் வேண்டும் என்பதால் புனே மற்றும் குஜராத் ஆகிய 2 அணிகளுக்கு, 2 ஆண்டுகள் மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டு பின்னர் கலைக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவலாக கசிந்தது. தற்போது புதிய அணிகள் சேர்க்கப்படுவதற்கான ஏலம் விரைவில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அடுத்த சீசனில் வெளிநாட்டைச் சேர்ந்த ஐந்து வீரர்களை ஆடும் லெவன் அணியில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், தற்போதைய நிலையில் ஒரு அணிக்கு 7 இந்திய வீரர்கள் என மொத்தம் 56 வீரர்கள் ஆடும் லெவன் அணியில் இடம் பெற முடியும். 10 அணிகள் வந்தால், 70 வீரர்கள் பங்கேற்க முடியும். இதனால், ஐந்து வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்கலாம். அப்படி அனுமதித்தால் கூட, 60 வீரர்களுக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். உங்களிடம் ஏற்கனவே ஏராளமான இந்திய வீரர்கள் உள்ளனர். அதேசமயம், சில தரமான வெளிநாட்டு வீரர்கள், நான்கு பேருக்கு மேல் அணியில் விளையாட முடியாது என்ற விதியால் வெளியில் உட்கார்ந்திருப்பதைப் பார்ப்பது வெட்கக்கேடானது என்றார். 

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியின் ஆடும் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதனால் சில அணிகளில் முக்கியமான வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி, சரியான அணியை தேர்வு செய்ய முடியாத நிலை உருவாகிறது. எனவே, ஐந்து வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அதன் வெளிப்பாடாகவே, சஞ்சய் மஞ்சேரக்கர் சற்று காட்டமாகவே தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்