'வயிற்றில் வாரிசு... காதல் ஜோடியை பிரித்த கொரோனா'!.. 'கண்ணீரோடு வரவேற்ற தோழி'!.. உணர்ச்சி வசப்பட்ட கம்மின்ஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

குவாரண்டைன் முடிந்து வெளியே வந்த பேட் கம்மின்ஸை, கர்ப்பமாக உள்ள அவரது தோழி கட்டித் தழுவி கண்ணீருடன் வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2021 தொடர் சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட பயோ-பபுள் கட்டமைப்பையும் மீறி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள், சன் ரைசர்ஸ் அணி வீரர்கள், மேலும் சில கொல்கத்தா அணி வீரர்கள் என்று கொரோனா அடுத்தடுத்து பரவத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பிசிசிஐ, 31 ஆட்டங்கள் மீதமிருக்கும் போது, ஐபிஎல் போட்டிகளை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

எனினும், கடந்த மே 29 அன்று பிசிசிஐ சார்பில் நடந்த SGM மீட்டிங்கில் ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் - அக்டோபர் வரை மீதமுள்ள 31 போட்டிகளும் நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.   

முன்னதாக, ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வந்த இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேச வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர். எனினும், இந்தியாவில் இருந்து பயணிகள் எவரும் ஆஸ்திரேலியாவில் நுழைய மே 15ம் தேதி வரை தடை அந்நாடு தடை விதித்திருந்தது. இதனால் ஐபிஎல்லில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என மொத்தம் 38 பேரை இந்திய கிரிக்கெட் வாரியம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது.  

அதன்படி, மே 17ம் தேதி வார்னர், ஸ்மித், கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்களும், நிர்வாகிகள், வர்ணனையாளர்கள் என 38 பேரும் பத்திரமாக நாடு திரும்பினர். எனினும், அவர்கள் அனைவரும் சிட்னியில் மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்னர். இந்த சூழலில், தங்களது குவாரண்டைன் காலம் முடிந்து, வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். இதில், நெகிழ்ச்சியாக அமைந்தது கம்மின்ஸ் அவரது தோழியுடனான சந்திப்பு தான்.  

கம்மின்ஸ் தோழி பெக்கி பாஸ்டன் தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனால், கம்மின்ஸ் எப்போது வெளிவருவார் என்று ஆவலுடன் அவர் காத்திருந்தார். இந்த நிலையில், குவாரண்டைன் முடிந்து, விமான நிலையத்தில் இருந்து கம்மின்ஸ் வெளியே வந்த போது, அவரை ஓடிச் சென்று, பாஸ்டன் கட்டித் தழுவி கண்ணீருடன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்