'எப்பா சாமி!.. பிசிசிஐ-க்கு ஒரு பெரிய கும்பிடு'!.. 10 நாட்கள் போராட்டம்!.. நெகிழ்ந்து போன ஆஸ்திரேலிய வீரர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் நீண்ட நாள் பிரச்சினை ஒரு வழியாக முடிவடைந்துள்ளது.

ஐபிஎல் 2021 தொடர் சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், உச்சக்கட்ட பாதுகாப்பான பயோ-பபுள் கட்டமைப்பை உடைத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள், சன் ரைசர்ஸ் அணி வீரர்கள், சில கொல்கத்தா அணி வீரர்கள் என்று அடுத்தடுத்து கொரோனா பரவல் வேகமெடுத்தது. இதனால் அரண்டு போன பிசிசிஐ, 31 ஆட்டங்கள் மீதமிருக்கையில் ஐபிஎல் போட்டிகளை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

மேலும், ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வந்த வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் பத்திரமாக அனுப்பி வைத்தது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேச வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர்.

எனினும், இந்தியாவில் இருந்து பயணிகள் எவரும் ஆஸ்திரேலியாவில் நுழைய மே 15-ம்தேதி வரை தடை அந்நாடு தடை விதித்திருந்தது. இதனால் ஐபிஎல்லில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என மொத்தம் 38 பேரை இந்திய கிரிக்கெட் வாரியம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது. மாலத்தீவில் அவர்கள் தனிமையில் இருந்த பிறகு தங்கள் நாட்டுக்கு திரும்ப முடிவு செய்திருந்தனர். 

அதன்படி, இன்று (மே 17) வார்னர், ஸ்மித் உள்ளிட்ட வீரர்களும், நிர்வாகிகள், வர்ணனையாளர்கள் என 38 பேரும் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். குறிப்பாக, வேறு எந்தவித பிரச்சனையும், சிக்கலும் இன்றி அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர்.

ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த பாதுகாப்பான பயணத்துக்கு மிக முக்கிய காரணமாக இருந்து செயல்பட்டது இந்திய கிரிக்கெட் வாரியம் என்றால் மிகையாகாது.

ஏனெனில், பயோ-பபுள் பாதுகாப்பையும் மீறி, கொரோனா தொற்று வீரர்களுக்கு பரவத் தொடங்கியதில் வெளிநாட்டு வீரர்கள் அரண்டு போனார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியர்கள். ஏனெனில், நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட இதர வெளிநாட்டு வீரர்களை, அந்தந்த நாடுகளின் அரசுகள், மீண்டும் அழைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டன. ஆனால், ஆஸ்திரேலிய அரசோ, இந்திய நாட்டில் வரும் எவருக்கும் மே 15 வரை ஆஸ்திரேலியாவில் நுழைய அனுமதியில்லை என்று தடை விதித்துவிட்டது. இந்த அறிவிப்பு, ஆஸ்திரேலிய குடிமகனாக இருந்தாலும், நுழைய அனுமதி இல்லை என்று கைவிரிக்க, என்ன செய்வதென்று தத்தளித்தனர். 

ஆனால், வீரர்களுக்கு பக்கபலமாக இருந்த பிசிசிஐ, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு என தனியாக விமானம் ஏற்பாடு செய்து, அவர்களை மாலத்தீவில் பத்திரமாக தங்க வைத்தது. அதுமட்டுமின்றி, வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் பிசிசிஐ செய்து கொடுத்து, அவர்களது பாதுகாப்பையும் உறுதி செய்தது.

ஏற்கனவே பயோ-பபுளில் கொரோனா நுழைந்துவிட்டதால், வீரர்கள் ஆஸ்திரேலியா செல்லும் வரை வேறு எந்த வீரருக்கும் கொரோனா ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாகவும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சிட்னி சென்றடைந்துள்ள ஆஸ்திரேலிய வீரர்கள், அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அவரவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்