“அந்த ஒரு வீரர் இல்லைன்னா 3 மேட்ச் தோத்திருக்கீங்க”.. தொடர் தோல்வி.. சிஎஸ்கே அணிக்கு இர்பான் பதான் முக்கிய அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் முக்கிய அறிவுரை கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் விளையாடிய முதல் 3 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வி பெறுவது இதுவே முதல் முறை. இது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மும்பை மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. அதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் லிவிங்ஸ்டன் 60 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது. ஆரம்பமே தொடக்க ஆட்டக்காரர் ருதுராக் கெய்க்வாட் 1 ரன்னில் அவுட்டாக அடுத்துவந்த ஆல்ரவுண்டர் மொயின் அலி டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஜடேஜாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த தோனி மற்றும் சிவம் துபே கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அப்போது 57 ரன்கள் எடுத்திருந்தபோது லிவிங்ஸ்டன் வீசிய ஓவரில் சிவம் துபே ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த ஆல்ரவுண்டர் பிராவோ, எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து தோனியும் 23 ரன்களில் வெளியேற, 18 ஓவர்கள் முடிவில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் சிஎஸ்கே அணிக்கு முக்கிய அறிவுரை கொடுத்துள்ளார். அதில், ‘நீங்கள் ஒரு வீரரை (தீபக் சஹார்) மிஸ் செய்வதாக நினைத்து, 3 போட்டிகளை இழந்துள்ளீர்கள்.  சிஎஸ்கே அணியை தயார்படுத்த வேண்டிய தேவை வந்துள்ளது’ என இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார் காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர், இந்த மாத இறுதியில் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பவர் ப்ளே ஓவர்களில் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக தீபக் சஹார் இருந்துள்ளார். இவர் இல்லாதது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

CSK, IPL, DEEPAK CHAHAR, IRFAN PATHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்