மறுபடியும் எடுக்கலாமா? வேண்டாமா?.. முக்கிய 2 வீரர்கள் குறித்த ‘முடிவு’ தோனியின் கையில்.. பரபரக்கும் ஐபிஎல் களம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் இரண்டு மூத்த வீரர்கள் அணியின் நீடிப்பது தோனியின் கையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஐபிஎல் அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலத்தை பிப்ரவரி மாதம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் சில வீரர்களை வெளியேற்றிவிட்டு புதிய வீரர்களை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே அணியில் கடந்த ஐபிஎல் சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சில வீரர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து Cricbuzz வெளியிட்ட தகவலின்படி, சென்னை அணியின் முரளி விஜய், பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர் ஆகியோர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் சுரேஷ் ரெய்னா மற்றும் கடந்த ஐபிஎல் சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேதர் ஜாதவ் ஆகியோரை நீக்கவும் சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவர் குறித்த முடிவை கேப்டன் தோனிதான் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஐபிஎல் சீசனில் துபாய் சென்ற சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் சொந்தக் காரணங்களுக்காக அவர் உடனடியாக இந்தியா திரும்பினார். ஆனாலும் பல்வேறு சர்ச்சைகள் அவரை சுற்றி உலா வந்தன. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை அணியில் விளையாட விருப்பம் இருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் கேதர் ஜாதவ் கடந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 62 ரன்களை மட்டுமே எடுத்தார். முக்கியமான சில போட்டிகளில் அவரது மோசமான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதனால் கேதர் ஜாதவ் நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் ஏலத்துக்கு முன்பு தோனியிடம் ரெய்னா மற்றும் கேதர் ஜாதவ் குறித்த அபிப்ராயம் கேட்கப்படும் என்றும் அதன்படியே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிஎஸ்கே அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படும் நிலையில், இந்த சீசனில் இளம்வீரர்கள் எடுக்க வாய்ப்பு உள்ளதா? என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்