சூப்பர் ஓவர்ல ‘SRH’ பண்ணுன 2 பெரிய தப்பு.. இது ஜானி பேர்ஸ்டோவுக்கு மட்டுமில்ல ரசிகர்களுக்கே ‘ஷாக்’ தான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி இரண்டு தவறுகளை செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் 20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ப்ரீத்வி ஷா 53 ரன்களும், கேப்டன் ரிஷப் பந்த் 37 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 34 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. ஆனால் ஆரம்பத்திலேயே கேப்டன் டேவிட் வார்னர் (6 ரன்கள்) ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோவுடன் கூட்டணி சேர்ந்து நிதானமாக விளையாடினார். இதில் 38 ரன்கள் எடுத்திருந்தபோது ஆவேஷ் கான் ஓவரில் ஜானி பேர்ஸ்டோ அவுட்டாகினார்.

இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். இந்த சமயத்தில் களமிறங்கிய சுஜித் 6 பந்துகளில் 14 ரன்கள் (2 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்து போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணியும் 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 66 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால், போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. அப்போது கேன் வில்லியம்சனுடன் பேட்டிங் செய்ய வார்னர் களத்துக்கு வந்தார். வழக்கமாக சூப்பர் ஓவரில் ஜானி பேர்ஸ்டோதான் விளையாடி வருகிறார்.

மேலும் இப்போட்டியில் அதிக ரன்கள் அடித்தது ஜானி பேர்ஸ்டோவும், கேன் வில்லியம்சனும்தான். அதனால் இவர்கள் இருவரும் தான் சூப்பர் ஓவரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வார்னர் களமிறங்கினார். இது பேட்டிங் செய்வதற்காக காலில் பேட் கட்டி தயாராக நின்ற, ஜானி பேர்ஸ்டோவுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து சூப்பர் ஓவரில் முடிவில் ஹைதராபாத் அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் கேன் வில்லியம்சன் ஒரு பவுண்டரி அடித்திருந்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் ஓடியபோது வார்னர் சரியாக பேட்டை கிரீஸில் வைக்கவில்லை. இதனால் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இதுவும் ஹைதராபாத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 8 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஹைதராபாத் அணியின் தோல்விக்கு, சூப்பர் ஓவரில் ஜானி பேர்ஸ்டோவை களமிறக்காததும், வார்னர் சரியாக கிரீஸில் பேட்டை வைக்காமல் ஒரு ரன்னை தவறவிட்டததும்தான் காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்