‘இவருக்கா இந்த நிலைமை..!’.. ரூ.8.5 கோடிக்கு ஏலம் போன மனுசன் இப்போ நெட் பவுலர்.. அந்த ஒரு ‘ஓவர்’ அவரோட தலையெழுத்தையே மாத்திருச்சு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் ஏலத்தில் 8.5 கோடி ரூபாய் ஏலம் போன வீரர் தற்போது நெட் பவுலராக இடம்பெற்றுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ள இந்த தொடரின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சென்ற சிஎஸ்கே வீரர்கள், அங்கு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே பல வெளிநாட்டு வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி வருகின்றனர். சமீபத்தில் இங்கிலாந்து வீரர்களான ஜானி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), கிறிஸ் வோக்ஸ் (டெல்லி கேப்பிடல்ஸ்) மற்றும் டேவிட் மாலன் (பஞ்சாப் கிங்ஸ்) ஆகியோர் திடீரென விலகினர். அதனால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் டொமினிக் டிரேக்ஸ், பிடல் எட்வர்ட்ஸ், ரவி ராம்பால் மற்றும் ஷெல்டன் கோட்ரெல் ஆகிய நான்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை நெட் பவுலராக பஞ்சாப் கிங்ஸ் அணி சேர்த்துள்ளது. இதில் ஷெல்டன் கோட்ரெல் கடந்த 2020-ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். இவரை 8.5 கோடி ரூபாய் கொடுத்து பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. இதனால் இவர் மீது அப்போது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த சூழலில் ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான போட்டி ஒன்று அவரது கிரிக்கெட் வாழ்க்கையை தலைகீழாக திருப்பிப் போட்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 223 ரன்களை குவித்தது. இந்த இமாலய இலக்கை ராஜஸ்தான் அணியால் எட்ட முடியாது என்றே அனைவரும் எண்ணினர். ஆனால் இளம் வீரர் ராகுல் திவாட்டியா அதை மாற்றி எழுதினார்.

ஆட்டத்தின் முதல் பாதிவரை சொதப்பலான ஆட்டத்தை ராகுல் திவாட்டியா வெளிப்படுத்தி வந்தார். இந்த சூழலில் ஷெல்டன் கோட்ரெல் வீசிய 18-வது ஓவரில், யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 சிக்சர்களை விளாசி மிரட்டினார். இதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால் 226 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டிக்கு பின் ஷெல்டன் கோட்ரெல் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். அதனால் அந்த சீசன் முழுவதும் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனை அடுத்து இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்திலும் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி நெட் பவுலராக ஷெல்டன் கோட்ரெலை எடுத்துள்ளது. 8.5 கோடி ரூபாய் ஏலம் போன வீரர், அதே அணிக்கு நெட் பவுலராக வந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்