‘பசி எடுத்தா போய் சாப்பாடு சாப்பிடுங்க.. அதுக்காக பந்தையா இப்படி சாப்பிடுறது’!.. SRH-ஐ இந்த அளவுக்கு யாரும் ‘பங்கம்’ பண்ணதில்ல.. மரணமாய் கலாய்த்த முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேவாக் கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.

ஐபிஎல் (IPL) தொடரின் 33-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் (DC), கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் (SRH) மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக அப்துல் சமத் 28 ரன்களும், ஆல்ரவுண்டர் ரஷித் கான் 22 ரன்களும் எடுத்தனர். ஆனால் ஹைதராபாத் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் டக் அவுட்டாகியும், கேன் வில்லியம்சன் 18 ரன்களிலும், மனிஷ் பாண்டே 17 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். குறிப்பாக கேன் வில்லியம்சனின் கேட்ச்சை இரண்டு முறை டெல்லி வீரர்கள் தவறவிட்டனர். அப்படி இருந்தும் கேன் வில்லியம்சன் ஏமாற்றம் அளித்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி அடைந்ததன் மூலம் மீண்டும் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 1-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி கடைசி இடத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் (Virender Sehwag), ஹைதராபாத் அணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘ஹர்ஷத் மேத்தா கூறியதுபோல, சந்தையாக இருந்தாலும் அல்லது கிரிக்கெட்டாக இருந்தாலும் ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய ஆபத்து. ஆனால் பந்தே வேதனைப்படும் அளவுக்கு ஹைதராபாத் அணி விளையாடியது. பந்தை சாப்பிடாதீர்கள், அப்படி பசித்தால் போய் உணவை சாப்பிடுங்கள்’ என சேவாக் கூறியுள்ளார்.

நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் பங்கேற்வில்லை. அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இப்போட்டியில் விளையாடவில்லை. அதேபோல் அவருடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உள்ளிட்ட 6 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது ஹைதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்