அடுத்த விக்கெட் அவுட்!.. மொத்தமாக காலியாகும் கேகேஆர் கூடாரம்!? 'மீதமுள்ள ஐபிஎல்-ஐ எதிர்கொள்வது எப்படி'?.. கலக்கத்தில் ஷாருக்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்தடுத்து விழும் அடியால், மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று முதலில் ஏற்பட்டு, பிறகு அடுத்தடுத்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என கொரோனா பரவியது. இதனால், மறு தேதி குறிப்பிடாமல் ஐபிஎல்லை பிசிசிஐ ஒத்திவைத்தது.

எனினும், கடந்த மே 29 அன்று பிசிசிஐ சார்பில் நடந்த SGM மீட்டிங்கில் ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் - அக்டோபர் வரை மீதமுள்ள 31 போட்டிகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டது.   

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 சீசனின் மீதமுள்ள போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடிக்க உள்ளது. பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டத்தில் (எஸ்ஜிஎம்) இந்த முடிவு எடுக்கப்பட்டது. உறுப்பினர்கள் ஐபிஎல் மீண்டும் தொடங்க ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். மேலும், டி20 உலகக் கோப்பை 2021 நடத்துவதற்கு ஏதுவான நேரம் குறித்து முடிவெடுக்க கூடுதல் கால அவகாசம் ஐசிசியிடம் கேட்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும் என்றும், 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று ஸ்போர்ட்ஸ் டுடே சமீபத்தில் செய்தி வெளியிட்டது. ஆனால், பிசிசிஐ அதுகுறித்த தகவலை இன்று உறுதி செய்யவில்லை. 

அதே வேளையில், செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்ற ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் விளையாடுவதால், வீரர்களுக்கு உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாடுவதற்கு நல்ல ஒரு பயிற்சியாக இருக்கும். ஐபிஎல் தொடரை முடித்துவிடலாம், அதன்மூலம் டி20 உலகக் கோப்பைக்கு வீரர்கள் பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ கருதுவதாக கூறப்படுகிறது. 

இந்த சூழலில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், தான் இந்த ஆண்டு மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகை இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், விலகலுக்கான காரணத்தை கம்மின்ஸ் தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே, கம்மின்ஸ் தவிர கொல்கத்தா அணியில் எவரும் சிறப்பாக செயல்படாத நிலையில், இதுவரை நடைபெற்ற போட்டிகளில் வரிசையாக அந்த அணி தோற்றுக் கொண்டிருந்தது. முன்னதாக, கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கனும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது, ரூ.15.5 கோடிக்கு ஏலம் எடுத்த கம்மின்ஸும் அணியில் இருந்து விலகயிருப்பதால், கேகேஆர் அணி நிர்வாகம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்