VIDEO: ஐயோ..! கொல்கத்தாவின் ‘ஸ்டார்’ ப்ளேயருக்கு காயம்.. பேட்டிங் செய்ய வருவாரா..? அதிர்ச்சியில் KKR ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர் காயத்தால் பாதியிலேயே வெளியேறினார்.

ஐபிஎல் (IPL) தொடரின் இறுதிப்போட்டி இன்று (15.10.2021) துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், இயான் மோர்கன் (Eoin Morgan) தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இந்த கூட்டணி அதிரடி காட்டியது. இதில் 32 ரன்கள் அடித்திருந்தபோது சுனில் நரேன் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் அவுட்டானார். இதனை அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்கள் (3 சிக்சர்கள்) அடித்து ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த டு பிளசிஸ் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இந்த ஜோடி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதில் டு பிளசிஸ் 86 ரன்களும், மொயின் அலி 37 ரன்களும் எடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்தது.

இந்த நிலையில், இப்போட்டியின் இடையே பீல்டிங் செய்தபோது கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதிக்கு (Rahul Tripathi) காலில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியின் பாதியிலேயே அவர் வெளியேறினார். இதனை அடுத்து அவரை பிசியோ பரிசோதனை செய்தார். ஒருவேளை காயம் காரணமாக ராகுல் திரிபாதி பேட்டிங் செய்ய வராமல் போனால் கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதற்கு காரணம், முன்னதாக நடந்த டெல்லி அணிக்கு எதிரான ப்ளே ஆஃப் போட்டியில் 2 பந்துகளில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் கொல்கத்தா அணி இருந்தது. அப்போது ராகுல் திரிபாதி சிக்சர் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். இந்த சூழலில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது கொல்கத்தா ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்