ஐயோ இவரா..! சிஎஸ்கேவுக்கு எதிராக மோர்கன் எடுக்கப்போகும் பிரம்மாஸ்திரம்.. மறுபடியும் டீமுக்குள் வரும் பவர் ஹிட்டர்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வரும் 14-வது சீசன் ஐபிஎல் (IPL) தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப்போட்டி இன்று (15.10.2021) இரவு 7:30 மணிக்கு துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதவுள்ளன. எந்த அணி கோப்பையை கைப்பற்றவுள்ளது? என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக சிறப்பாக விளையாடி வருகின்றனர். பவுலிங்கை பொறுத்தவரை பிராவோ, ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஜோஸ் ஹசில்வுட், தீபக் சஹார் உள்ளிட்டோர் அற்புதமாக விளையாடி வருகின்றனர். ஆனால் மிடில் ஆர்டர் மட்டுமே சிஎஸ்கே அணியில் சற்று பலவீனமாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் அவுட்டானதும் அடுத்து வரும் வீரர்கள் பேட்டிங்கில் திணறுவதை பார்க்க முடிகிறது.

அதேபோல் கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை, யாருமே எதிர்பார்க்காத கம்பேக்கை கொடுத்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டத்தில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் பாதியில் 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக அந்த அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் நடந்த டெல்லி அணிக்கு எதிரான ப்ளே ஆஃப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற வெங்கடேஷ் ஐயர் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் (Andre Russell) மீண்டும் ப்ளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. காயம் காரணமாக சில போட்டிகளில் அவர் விளையாடாமல் இருந்தார்.

இந்த நிலையில், காயத்தில் இருந்து அவர் குணமடைந்துள்ளதால், சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரசல் களமிறங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ரசல் ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றால்,  சென்னை அணிக்கு அவர் பெரும் தலைவலியாக இருப்பார். அதற்கு காரணம் கொல்கத்தாவுக்கு எதிரான லீக் போட்டி ஒன்றில் சிஎஸ்கே 220 ரன்களை எடுத்திருந்தது. இந்த இமாலய இலக்கை கொல்கத்தா அணியால் சேசிங் செய்ய முடியாது என்றே பலரும் கருதினர்.

அதற்கு ஏற்றார் போலவே கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கொல்கத்தா அணி இழந்தது. இந்த சமயத்தில் களமிறங்கிய ரசல், சிஎஸ்கே அணியின் பந்து வீச்சை சிக்சர், பவுண்டரி என நாலாபுறமும் சிதறவிட்டார். இதனால் 22 பந்துகளில் 54 ரன்கள் (6 சிக்சர், 3 பவுண்டரி) அடித்து மிரட்டினார். அதேபோல் பேட் கம்மின்ஸும் (66* ரன்கள்) தன் பங்கிற்கு அதிரடி காட்ட 200 ரன்களை கொல்கத்தா அணி கடந்தது.

இதனால் கொல்கத்தா அணி வெற்றி பெரும் நிலைக்கு வந்தது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்த சமயத்தில் தோனி ஒரு முடிவு எடுத்தார். அதன்படி புதிதாக களமிறங்கும் வீரர்களின் விக்கெட்டுகளை சிஎஸ்கே வீரர்கள் குறி வைத்தனர். அதனால் 19.1 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் கொல்கத்தா அணி இழந்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கொல்கத்தா அணி நழுவவிட்டது. இப்படி ஒரு நிமிடத்தில் ஆட்டத்தை மாற்றக்கூடிய ரசல் மீண்டும் கொல்கத்தா அணியில் இடம்பிடித்தால் சிஎஸ்கே அணிக்கு சவாலாக இருப்பார் என கருதப்படுகிறது.

அதேபோல் கொல்கத்தா அணி இதுவரை இரண்டு முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அந்த இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா அணியே வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்