டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ‘பும்ரா’ தான் இன்னைக்கு டிரெண்டிங்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. அப்படி என்ன பண்ணார்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்ததை அடுத்து பும்ராவை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் ஷர்மா மட்டுமே 44 ரன்கள் எடுத்தார்.

டெல்லி அணியைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரோஹித் ஷ்ரமா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, இஷான் கிஷான் என மும்பை அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் அமித் மிஸ்ராவின் சுழலில் சிக்கி வெளியேறினர். அதேபோல் அவேஷ் கான் 2 விக்கெட்டுகளும், அஸ்வின், மார்கஸ் ஸ்டோனிஸ், ரபாடா மற்றும் லலித் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி டெல்லி அணி விளையாடியது. ஆனால் 2-வது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் ப்ரீத்வி ஷா (7 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதில் ஷிகர் தவான் 45 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 33 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் 17 ஓவர்கள் முடிவில் 116 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை டெல்லி அணி இழந்தது. இதனை அடுத்து 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஹெட்மியர்-லலித் யாதவ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

அப்போது போட்டியின் 18-வது ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே சென்றதால், 12 பந்துகளில் 15 ரன்கள் அடிக்கும் நிலைக்கு டெல்லி அணி சென்றது. இதனால் போட்டி பரபரப்பாக காணப்பட்டது. அந்த சமயத்தில் 19-வது ஓவரை பும்ரா வீசினார். ஆனால் முதல் பந்தே நோ பாலாக சென்றது. இதனை அடுத்து மூன்றாவது பந்தும் நோபாலாக அமைந்தது. இதனால் அந்த ஒரு ஓவரில் 10 ரன்கள் சென்றது.

இதனை அடுத்து 6 பந்துகளில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு டெல்லி வந்தது. அப்போது கடைசி ஓவரை பொல்லார்டு வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை ஹெட்மியர் பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்து நோ பாலாக அமைய, 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் பேட்ஸ்மேன்கள் பும்ராவை வெல்ல முடியாது, நோ பாலால் மட்டுமே முடியும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்