UAE-ல் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி..? ஆனா ஒரு கண்டிஷன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட தொடரில் 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் நடந்த பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டது. வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 18-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. இதனை அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதனால் இந்த இரு தொடர்கள் முடிந்த பிறகு ஐபிஎல் போட்டிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதில் ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முகக்கவசம், சானிடைசர் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்ற வேண்டும். கடந்த ஆண்டு ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க இருப்பதாக Cricbuzz சேனலுக்கு ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்