VIDEO: அஸ்வின் கிட்ட வம்பிழுத்தா அவரோட ‘ரிவென்ஜ்’ இப்படிதான் இருக்கும்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரிஷப் பந்த்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கனின் விக்கெட்டை எடுத்ததும் அஸ்வின் ஆக்ரோஷமாக கத்திய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் (IPL) தொடரின் 41-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன் (Eoin Morgan) பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை எடுத்தது.

அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவானும் (24 ரன்கள்), ஸ்டீவன் ஸ்மித்தும் (39 ரன்கள்) நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதேபோல் கேப்டன் ரிஷப் பந்தும் 39 ரன்கள் எடுத்தார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர், ஹெட்மயர், லலித் யாதவ், அக்சர் படேல் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகி வெளியேறினர். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கும் (Ashwin), கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி (Tim Southee) வீசிய போட்டியின் கடைசி ஓவரில் அஸ்வின் அவுட்டானார். அப்போது டிம் சவுத்தி, அஸ்வினைப் பார்த்து ஏதோ சொல்லி திட்ட, உடனே பதிலுக்கு அஸ்வினும் திட்ட ஆரம்பித்தார்.

அப்போது வந்த கேப்டன் இயான் மோர்கனும், அஸ்வினைப் பார்த்து ஏதோ கூற, உடனே கோபமான அஸ்வின் அவரை அடிப்பதுபோல அருகில் சென்றார். இதைப் பார்த்து வேகமாக ஓடி வந்த தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik), அஸ்வினை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பினார். இதனால் சிறிதுநேரம் போட்டி பரபரப்பாக காணப்பட்டது.

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸின் போது, 5-வது வீரராக இயான் மோர்கன் பேட்டிங் செய்ய களமிறங்கினார். உடனே கேப்டன் ரிஷப் பந்த், அஸ்வினை பந்துவீச அழைத்தார். அஸ்வின் வீசிய 12-வது ஓவரை எதிர்கொண்ட இயான் மோர்கன், லலித் யாதவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார். உடனே ஆக்ரோஷமான அஸ்வின், இயான் மோர்கனை பார்த்து கோபமாக ஏதோ சொல்லி விட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனாலும் இப்போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்