4000 கோடி நஷ்டப்பட முடியாது! 'பச்சைக்கொடி' காட்டிய அணிகள்... ஐபிஎல் தொடர 'இந்த' நாட்டுல தான் பிசிசிஐ நடத்த போகுதாம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வருடாவருடம் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி திருவிழா போல கொண்டாட வைக்கும் ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு கொரோனா காரணமாக தள்ளிப்போய் உள்ளன. மார்ச் மாத கடைசியில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டிகள் இன்று வரை நடைபெறவே இல்லை. ரசிகர்கள் இல்லாமல் நடத்த முடியாது என ஆரம்பத்தில் முரண்டு பிடித்த அணிகளும், தற்போது இன்னும் சில மாதங்களில் இந்த வருடமே முடிந்து விடும் என்பதால் கொஞ்சம் இறங்கி வந்துள்ளன.

அத்தோடு ஐபிஎல் போட்டிகள் நடத்த முடியாமல் போனால் சுமார் 4000 கோடி ரூபாய் நஷ்டமாகும் என்பதால் போட்டிகளை நடத்திட பிசிசிஐ படாதபாடு பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் குறித்து ஐக்கிய அரபு அமீரகத்துடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் அங்கு ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கு முன்பு தேர்தல் காரணமாக 2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அங்கு நடைபெற்றது என்பதால், இந்த முறையும் போட்டிகளை நடத்திட யுஏஇ அதிகாரிகள் ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால் செப்டம்பர் 26-ம் தேதி தொடங்கி நவம்பர் 6-ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்றும், வீரர்கள் பயிற்சிக்காக ஆகஸ்ட் 2-ம் வாரத்தில் அங்கு சென்று செப்டம்பர் முதல் வாரம் வரை பயிற்சியில் ஈடுபடுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பிசிசிஐ ஐபிஎல் போட்டிகள் குறித்து இதுவரை வாயை திறக்கவில்லை என்றாலும், செப்டம்பரில் ஐபிஎல் போட்டிகள் யுஏஇ-யில் நடைபெறும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்