அபுதாபி, சார்ஜா, துபாய் மைதானங்கள் எப்படி?... வெற்றி வாய்ப்பு 'எந்த' அணிக்கு அதிகம்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முதல்முறையாக ஐபிஎல் தொடர் முற்றிலும் வெளிநாடுகளில் நடைபெறவுள்ளது. ரசிகர்கள், சியர்ஸ் கேர்ள்கள் இன்றி முற்றிலும் புதுமையாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகளை நேரடியாக பார்க்க முடியவில்லை என்னும் ஏக்கம் எழுந்துள்ளது.

நாளை ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் துபாய், அபுதாபி, சார்ஜா மைதானங்களின் தன்மை, இதுவரை அங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் வெற்றி வாய்ப்பு விகிதம் ஆகியவற்றை முழுமையாக இங்கே பார்க்கலாம்.

அபுதாபி

20 ஆயிரம் இருக்கை வசதியை கொண்ட அபுதாபியில் உள்ள ஷேக் சயித் ஸ்டேடியத்தில் இதுவரை 44 சர்வதேச 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. 2013-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அயர்லாந்து 7 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது அதிகபட்சமாகும். கடந்த ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக நைஜீரியா 66 ரன்னில் முடங்கியது மோசமான ஸ்கோராகும். முதலில் பேட் செய்த அணி 19 ஆட்டங்களிலும், 2-வது பேட் செய்த அணிகள் 25 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு உதவிகரமாக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களும் அடிக்கடி எதிரணி பேட்ஸ்மேன்களை இங்கு மிரட்டியது உண்டு. 35 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும். அதன் தாக்கம் இரவிலும் அதிகமாக காணப்படும். தட்பவெப்ப நிலையை சமாளிப்பதை பொறுத்தே வீரர்களின் செயல்பாடு அமையும். இங்கு 20 லீக் ஆட்டங்கள் நடக்க உள்ளன.

துபாய்

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 2009-ம் ஆண்டில் இருந்து 20 ஓவர் போட்டிகள் நடந்து வருகின்றன. 25 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இங்கு இதுவரை 62 ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் 34-ல் முதலில் பேட் செய்த அணிக்கே வெற்றி கிடைத்திருக்கிறது. 2013-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 211 ரன்கள் திரட்டியது அதிகபட்சமாகும். குறைந்தபட்சமாக கென்யா, அயர்லாந்து அணிகள் தலா 71 ரன்னில் சுருண்டுள்ளது. இங்குள்ள ஒளிவிளக்குகள் ‘ரிங் ஆப் பயர்’ எனும் வடிவத்தில் மைதானத்தில் சுற்றியுள்ள மேற்கூரையில் அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பம்சமாகும். மொத்தம் 350 மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. மின் கோபுரம் கிடையாது. இதனால் விளையாடும் வீரர்களின் நிழல் தரையில் பெரிய அளவில் விழாது. 24 ஐபிஎல் ஆட்டங்கள் இந்த மைதானத்தில் இடம் பெறுகிறது.

சார்ஜா

அமீரகத்திலேயே பழமையான ஸ்டேடியமான சார்ஜாவில் 14 சர்வதேச 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இவை பெரும்பாலும் சிறிய அணிகள் விளையாடிய ஆட்டங்கள் ஆகும். இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஓரளவு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 2014-ம் ஆண்டில் இங்கு நடந்த ஐபிஎல்  போட்டிகளில் சென்னை, கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தாங்கள் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றன. இந்த முறை 12 லீக் ஆட்டங்கள் நடக்க உள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்