ஒலிம்பிக்கில் ‘வரலாறு’ படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி.. சர்ப்ரைஸாக வந்த ஸ்டார் ‘கிரிக்கெட்’ ப்ளேயரின் வாழ்த்து.. ‘இத நாங்க எதிர்பார்க்கவே இல்ல’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில், நேற்று இந்திய ஆண்கள் அணி கிரேட் பிரிட்டனை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 49 வருடங்களுக்கு பின் இந்திய ஆண்கள் அணி ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. அதேபோல் இந்திய மகளிர் ஹாக்கி அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்த வருட ஒலிம்பிக்கின் ஆரம்பகட்ட போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தது. நெதர்லாந்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில், 5-1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து ஜெர்மனிக்கு எதிரான போட்டியிலும் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த கிரேட் பிரிட்டனுக்கு எதிரான மூன்றாவது ஹாக்கி போட்டியிலும் இந்திய மகளிர் அணி தோல்வியையே தழுவியது.

தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி இருந்தது. அப்போது அயர்லாந்துக்கு எதிரான நான்காவது போட்டியிலும், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறை ஒலிம்பிக்கில் கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், கால்இறுதிப்போட்டியில் இன்று (02.08.2021) ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொண்டது. இதில் தொடக்கத்தில் இருந்தே இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது. 22-வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜித் முதல் கோல் அடித்து அசத்தினார். இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதியில் இந்திய அணி முன்னிலை வகித்தது.

ஆனால் கடைசி வரை ஆஸ்திரேலிய அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் ஒலிம்பிக்கில் முதல்முறையாக இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதனால் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் சர்ப்ரைஸாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தங்கள் நாட்டு அணி கால்இறுதியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தாலும், அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் டேவிட் வார்னர் வாழ்த்து தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்